திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஹிந்தி - அறிமுகம் - Introduction to Hindi

      नमस्ते दोस्तों! வணக்கம் நண்பர்களே!

      ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டி இங்கு வந்துள்ள அனைவருக்கும் என் வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

      மொழி மனிதனின் தலைசிறந்த படைப்புகளில்  ஒன்றாகும்.
தன் எண்ணங்களைப் பறிமாற ஒசைகளை எழுப்பி,
அதற்கு எழுத்து வடிவம் கொடுத்து,
அதை மொழி என்று தொகுத்து,
அதற்கு ஒரு இலக்கணத்தையும் வகுத்து,
மொழி சிறக்க இலக்கியங்களைப் படைத்து,
தானறிந்த அறிவை தன்னவர்கள் தெரியவேண்டி அதனை ஏட்டில் வடித்து பெருமை சேர்த்தவன் மனிதன்.
      மற்ற எல்லா அறிவையும் பெறுவதற்கு மூலதனமாக இருப்பது மொழியே.
மொழியின் அழகையும் பெருமையையும் ரசிக்க வாழ்க்கை முழுதும்கூடப் போதாது..
      மொழியைப் படிப்பது என்றாலே இன்பம் தான். ஆனால் அது நமக்குப் புரிவதில்லை. சிறு குழந்தை தன் அன்னை சொல்லித்தருவதைக் கேட்டு அழகாக மொழியைப் பேசக் கற்கிறதே, அந்தக் குழந்தைக்குத் தெரியும் மொழி கற்பது எவ்வளவு இனிமையானது என்று...  தாய் பேசுவதைக் கேட்டு 'அம்மா' என்று அழகாக தன் மழலை மொழியில் குழந்தை அழைக்கும் போது அந்த அம்மாவுக்குத் தெரியும் மொழி கற்பது எவ்வளவு சுவையானது என்று..
      தாய்மொழி கற்பது தாளாத இன்பம் எனில் மற்ற மொழி கற்பது மட்டற்ற இன்பம். அதிலும் ஹிந்தி மொழி, பேசுவதற்கும் கேட்பதற்கும் மிகவும் இனிமையான மொழியாகும். தமிழ் போலன்றி ஹிந்தி ஓசை வளம் பெற்றது. தமிழில் இல்லாத பல ஓசைகள் ஹிந்தியில் உள்ளன. அதன் ஒவ்வொரு எழுத்துக்களும் ஓசைகளின் அடிப்படையில் அழகாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்துக்களும் பார்ப்பதற்கு நல்ல வடிவத்துடனும் மேல் கோட்டுடனும் அவ்வளவு அழகாக இருக்கும்
      ஹிந்தி இந்தியாவில் தான் அதிகமாகப் பேசப்படுகிறது, ஏறக்குறைய இந்தியா முழுவதும் பேசப்படுகிறது ஒரு சில மாநிலங்களைத் தவிர.
உலகம் முழுவதிலும் மொத்தமாக ஏறக்குறைய 500 மில்லியன் மக்களால் ஹிந்தி பேசப்படுகிறது. உலகிலேயே நான்காவது பெரிய மொழி அதாவது அதிகமாக பேசப்படும் மொழி ஹிந்தி ஆகும்.இந்தியாவில் மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும் ஹிந்தி உள்ளது. பல்வேறு மொழிகளையும் பல விதமான கலாச்சாரங்களையும் கொண்ட நம் இந்திய தேசத்தை இணைக்கும் தேசிய ஒருமைப்பாட்டு மொழியாக இருப்பது ஹிந்தியின் சிறப்பாகும்.

      ஹிந்தி கற்றுக் கொள்ளவேண்டி இங்கு வந்துள்ள தமிழர்கள் அனைவரையும் வரவேற்கிறேன். நானும் ஒரு தமிழன் தான். ஆர்வத்தால் சொந்த முயற்சியாலும் அனுபவத்தாலும் ஹிந்தி கற்றுக் கொண்டேன். அதை மற்றவர்களுக்கும் கற்றுத்தருவதில் பெருமைப்படுகிறேன்.நான் தமிழைத் தாய்மொழியாக கொண்டு ஹிந்தியைக் கற்றுக் கொண்டதால் தமிழ்வழியாக ஹிந்தியைக் கற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் எனக்குத் தெரியும், ஆதலால் என்னால் எளிமையாகவும் தெளிவாகவும் ஹிந்தி கற்பதில் உங்களுக்கு உதவ முடியும்.

      நல்லது.. இப்போது ஹிந்தியைப் பற்றி சில வரிகள். முன்பு சொன்னது போல சீன மொழி, ஸ்பானிய மொழி, ஆங்கிலத்தை அடுத்து ஹிந்தி உலகிலேயே மிக அதிகமாகப் பேசப்படும் நான்காவது மொழி ஆகும். ஏறக்குறைய இந்தியா முழுவதும் மற்றும் பங்க்ளாதேஷ், நேபால், சிங்கப்பூர், மலேசியா, பாகிஸ்தான், சௌத் ஆஃப்ரிகா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் ஹிந்தி பேசப்படுகிறது. ஹிந்தி திரைப்படதுறையான 'பாலிவுட்' ஆனது வெளி நாடுகளிலும் பிரபலமாக உள்ளது.
     ஹிந்தி சமஸ்கிருதத்தின் வழிவந்த மொழி ஆகும். இதன் இலக்கணம் பெரும்பாலும் சமஸ்கிருதத்தில் இருந்தே உருவானது. ஹிந்தியின் பெரும்பாலான சொற்கள் சமஸ்கிருதத்திலும் அரேபிய-பாரசீக மொழியில் இருந்து பெறப்பட்டவை.
சமஸ்கிருதம் மற்றும் அரேபிய-பாரசீக மொழிகளின் கலவையால் உருவானதே ஹிந்துஸ்தானி எனப்பட்ட ஹிந்தி மொழியாகும். சமஸ்கிருத மொழி சிறந்த மொழியாக இருந்த போதிலும் சாதாரண மக்கள் புரிந்துகொள்ள கடினமானதாக இருந்தது. எனவே இடைக்காலத்தில் இந்திய மக்களுக்கு எளிமையான ஒரு மொழி தேவைப்பட்டது. அரேபிய-பாரசீக மன்னர்களின் ஆட்சியின் விளைவால், சமஸ்கிருத அரேபிய-பாரசீக மொழிகளின் கலப்பால் மக்களுக்கு எளிமையாகவும் இனிமையாகவும் பேசக் கிடைத்த மொழியே இந்தி மொழியாகும். இது இடைக்காலத்தில் ஹிந்துஸ்தானி எனவே அழைக்கப்பட்டது. பின்பு இது உர்து, ஹிந்தி என பிரிந்தது. ஹிந்தி உர்து இரு மொழிகளும் ஒன்றே. உருது எழுத்து வடிவத்தில் மட்டுமே வேறுபட்டது. உருது ஷாஹ்முகி எனப்படும் அராபிக் எழுத்தில் எழுதப்படுகிறது. ஹிந்தி தேவனாகரி என்னும் எழுத்து வடிவத்தில் எழுதப்படுகிறது. சமஸ்கிருதம், மராத்தி, நேபாலி போன்ற மொழிகளும் தேவனாகரி எழுத்தைதான் உபயோகிக்கின்றன.

ஒரு மொழியைப் கற்பது என்றால் எழுதவும் படிக்கவும் பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும். இது மூன்றும் இல்லாமல் மொழி கற்றல் என்பது முழுமையாகாது. பேசுவது என்பதில், மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதும் அடங்கும். எனவே தாங்கள் ஹிந்தியைக் கற்க ஆரம்பிக்கும் போதிலிருந்தே, எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக்கொள்வதே சிறந்தது.
     முதலில் எழுத்துக்களை எழுதவும், அந்த எழுத்துக்களை சரியான முறையில் உச்சரிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.
      பிறகு அந்த எழுத்துக்களைப் பார்த்து வார்த்தைகளைப் படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எழுத்துக்களின் உச்சரிப்பைக் கற்றுக் கொள்ளாமல் சொற்களை சரியாகப் படிக்க முடியாது. ஏனெனில் தமிழில் உள்ளதைவிட ஹிந்தியில் எழுத்துக்களும் ஓசைகளும் அதிகமாக உள்ளன.
      பிறகு படிப்படியாக இலக்கணத்தையும்(Grammar), சொற்களையும்(Vocabulary) கற்றுக் கொள்ளுங்கள்.
     பிறகு நீங்கள் அறிந்த சொற்கள் மற்றும் இலக்கணத்தைக் கொண்டு வாக்கியங்களை அமைத்துப் பழகுங்கள்.
      பிறகு மற்றவர்கள் ஹிந்தி பேசுவதைப் பார்த்தும், கேட்டும், கவனித்தும், நீங்களும் பேசப் பழகுங்கள். இதற்கு ஹிந்தி திரைப்படங்கள், பாடல்கள் போன்றவை மிக உதவியாக இருக்கும்.
      எழுதவும் படிக்கவும் கற்காமல் ஹிந்தி பேசுபவர்கள் பேசுவதை மட்டுமே கேட்டு ஹிந்தி பேசக் கற்கலாம் என சிலர் நினைக்கலாம். ஒருவர் ஹிந்தி பேசுவதைக் கேட்டு, நாமும் "துமாரா நாம் கியா ஹை? என்று பேசலாம். ஆனால் அது "ஏக் கான்வ் மேன் ஏக் கிஸான் ரகு தாத்தா" என்பதைப் போல காமெடி ஆகிவிடும். இவ்வாறு ஒருவர் ஹிந்தி பேசுவதைக் கேட்டு நாம் ஹிந்தி பேச முயற்சிக்கும் போது, அசலில் அவர் என்ன பேசுகிறார், எப்படி உச்சரிக்கிறார், வார்த்தைகளை எப்படி உபயோகிக்கிறார், இலக்கணத்தை எப்படி அனுசரிக்கிறார் இது எதுவுமே நாம் புரிந்து கொள்ள முடியாது.
நாம் பேசும்போது பேசுவது சரிதானா, இல்லையா, உச்சரிப்பு சரியா தவறா என்ற குழப்பம் இருந்து கொண்டே இருப்பதால் ஒரு தெளிவோடு பேச முடியாது.
       இவ்வாறு ஹிந்தி பேசுவதைக் கேட்டே நாமும் கற்க வேண்டுமென்றால், சிறு குழந்தை பேசக் கற்பது போல Trial and Error முறையில் தான் கற்க வேண்டும். அதற்கு குறைந்தது இரண்டு வருடங்கள் ஆகும்.
      அது மட்டுமல்ல, இவ்வாறு ஒருவர் பேசுவதைக் கேட்டு கற்றுக்கொள்ள சிறு குழந்தைக்கு மட்டுமே பொறுமை இருக்கும். குழந்தை தவிர சிறுவர்கள் பெரியவர்கள் யாருக்கும் இவ்வாறு கற்க பொறுமை இருக்காது.
      அப்படிக் கற்க முயற்சித்தாலும் நம்மால் எவ்வளவு வாக்கியங்களை மனப்பாடம் செய்து நியாபகம் வைத்து, தவறில்லாமல் பேச முடியும்? இயலாத காரியம்.
     
       அப்படி இல்லாமல் எழுத்துக்களைப் சரியாக் உச்சரிக்க, படிக்க எழுதக் கற்று, பின்னர் படிப்படியாக வார்த்தைகளையும் இலக்கணங்களையும் வாக்கிய முறைகளையும் கற்று, அதோடு மற்றவர்கள் ஹிந்தி பேசுவதையும் கேட்டு கற்கும் போது மிக எளிமையாக மூன்றே மாதத்தில் நன்றாக் ஹிந்தி பேச எழுதப்படிக்க கற்று விடலாம்.

தேவனாகரி எழுத்து முறை பற்றியும் ஹிந்தி கற்பதற்கான பாடங்களையும் மற்ற பதிவுகளில் பார்ப்போம்.
நான் பதிவிடும் பாடங்கள் எதேனும் புரிந்துகொள்ள சிரமமாக இருந்தாலோ, எதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ தயக்கமின்றி கம்மெண்ட் செய்யுங்கள் அல்லது ashok58627@gmail.com க்கு மெயில் செய்யுங்கள்.

வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்!
நமஸ்தே! பிர் மிலேங்கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக