செவ்வாய், 31 ஜூலை, 2018

ஹிந்தி மெய் எழுத்துக்கள் - क வரிசை

   
                           இன்று ஹிந்தி மெய் எழுத்துக்களில் க வரிசை எழுத்துக்களைக் கற்போம்.


ஹிந்தி க வரிசை மெய் எழுத்துக்கள் - Hindi Consonants क Varg


முன்பே சொன்னது போல ஒரு வரிசையில் உள்ள ஐந்து எழுத்துக்களில் முதல் எழுத்து, சாதாரண ஓசை,இரண்டாம் எழுத்து சாதாரண ஓசையுடன் அதிக காற்றோசை, மூன்றாம் எழுத்து அழுத்தமான ஓசை , நான்காம் எழுத்து அழுத்தமான ஓசையுடன் சேர்ந்த காற்றோசை, ஐந்தாவது எழுத்து நாசிக ஓசை. க முதல் ப வரையுள்ள ஐந்து வரிசை எழுத்துக்களும் இதே வரிசை முறை தான். இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

                            ஹிந்தியில் முதல் மெய் எழுத்து क. மெய் எழுத்துக்கள் பற்றிய விளக்கத்தில் முன்பு பார்த்தோம் அல்லவா. வரிசையில் முதல் எழுத்து சாதாரண உச்சரிப்பு. எனவே இது எந்த முயற்சியும் சிரமமும் இல்லாமல் எளிமையாக உச்சரிக்கப்படும் சாதாரண க. இது தமிழிலுள்ள "கண்" "கத்தி" என்பதில் உள்ள "க" வைப்போல உச்சரிக்கப் படுகிறது.

இதை எழுதும் முறை படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இதை எழுதுவது மிகவும் எளிதானது. மேலிருந்து கீழாக ஒரு நேர்க்கோடு போட்டு, அதன் மையத்தில் ஆரம்பித்து படுக்க வைத்த 8 போல போட வேண்டும்.
எழுத்தும் அதன் உச்சரிப்பும் மனதில் பதியும் வரை மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டே எழுதிப் பாருங்கள். எழுதுவது அனாவசியம், எழுதாமலே நான் படித்துக் கொள்ளுவேன் என்று நினைக்காதீர்கள். எழுத்துக்களை எழுதிப் படிப்பது, கற்பதை மிக எளிதாக்கும். மேலும், எழுதத் தெரியாமல் எழுத்துக்களைப் படிக்கத் தெரியாமல் ஒரு மொழியைக் கற்பது முழுமையாகாது.
இப்போது "क" வில் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
कमरा- கம்ரா-KAMRAA-அறை
कौआ-கௌஆ-KOUVAA-காக்கை
मकान-மகான்-MAKAAN-
सडक-சடக்-SAFDAK-சாலை
                                  மேலே உள்ள ஹிந்தி வார்த்தைகளைப் பார்த்து நாம் கற்ற எழுத்தான " क" வை அடையாளம் காண முயற்சியுங்கள். இதேபோல அடுத்தடுத்த எழுத்துக்களைக் கற்கக் கற்க நாம் முன்பு கற்ற அனைத்து எழுத்துக்களையும்  அடையாளம் காண முயாற்சியுங்கள். அனைத்து எழுத்துக்களையும் விரைவாகக் கற்று விடலாம்.
எழுத்துக்களைக் கற்ற பிறகே உண்மையான ஹிந்தி கற்றல் ஆரம்பாமாகும். அதற்கு முன் எழுத்துக்களைக் கற்பது அத்தியாவசியமாகும்.
முதல் இரண்டு வார்த்தைகளில் முதலில் "क" உள்ளது. ஸ்வர் அக்ஷர்-உயிர் எழுத்து மற்றும் அதன் மாத்ராக்கள் நாம் ஏற்கெனவே கற்று விட்டோம். இந்த வார்த்தைகளில் அவற்றையும் அடையாளம் காண முயற்சியுங்கள்.
இரண்டாவது வார்த்தையில் "क" வுடன் "औ मातरा- ஔ மாத்ரா" வான ौ உள்ளதைக் கவனித்திருப்பீர்கள்.
எனவே क + औ =कौ ( க்+ஔ=கௌ)
அடுத்த வார்த்தையில் இரண்டாவது எழுத்தாக क உள்ளது. மேலும் क வுடன் आ  மாத்ராவான ा உள்ளது. எனவே அது क + आ = का  (க் + ஆ= கா) என உச்சரிக்கப்படும்.
நினைவில் கொள்ளுங்கள். தமிழில் தனித்தனி உச்ரிப்பிற்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லாததால் க வை சிலர் ஹ என சில தமிழ் வார்த்தைகளில் உச்சரிப்பர்.
உதாரணமாக "சுகம்" என்பதை "சுஹம்" என உச்சரிப்பர். ஹிந்தியில் அவ்வாறு கூடாது. ஹிந்தியில் ஹ விற்கு தனியே வேறு எழுத்து உள்ளது. ஹிந்தி क வை ஹ என்று உச்சரிக்கக் கூடாது.

தமிழில் KA GA HA ஆகிய ,மூன்று ஓசைகளுக்கு "க" வை உபயோகிக்கிறோம்.
"ச" வை சில நேரம் CHA என்றும் சில  நேரம் SA என்றும் சில நேரம் SHA என்றும் உச்சரிக்கிறோம்.
பெரும்பாலும் ஹிந்தியில் நாம் என்ன எழுதுகிறோமோ அப்படியே தான் உச்சரிக்கிறோம். எனவே ஹிந்தி எழுத்துக்களின் உச்சரிப்பை சரியாகக் கற்றுக் கொள்ளுங்கள். பின்பு எழுத்துக்களை சேர்த்து வார்த்தைகளை உச்சரித்துப் பழகுங்கள்.
ஹிந்தியில் क என்று எழுதினால் क-(Ka-க1)  என்று தான் உச்சரிப்போம். வேறு எந்தக் குழப்பமும் இல்லை.

क வரிசையில் அடுத்த எழுத்து ख. இது முதல் க வைப்போலவே அதிகக் காற்றோடு உச்சரிக்க வேண்டும்.
இதனை ஆங்கிலத்தில் ASPIRATION என்பர். இதற்கு இந்த எழுத்தை உச்சரிக்கும் போது வாயில் இருந்து காற்று வெளியேறுமாறு உச்சரிக்க வேண்டும் என்று அர்த்தம்.
அதாவது, முதல் எழுத்து क எந்த முயற்சியும் இல்லாமல் எளிதாக சாதாரணமாக வருவது. இரண்டாவது எழுத்தானது முதல் எழுத்தின் காற்றோசை வடிவம். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் முதல் क வின் ASPIRATED VERSION.
முதல் क வை உச்சரிக்கும் போது வாயை விட்டு காற்று வெளியே வராது. இரண்டாவது ख வை உச்சரிக்கும் போது வாயின் முன்னே கையை வைத்துப் பார்த்தால் கையில் காற்று படும் அளவுக்கு காற்று வெளிப்படும்.
இதன் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்று தோன்றினால் "க்க" என்று உச்சரித்துப் பாருங்கள்(இரண்டு தனித்தனி எழுத்தாக உச்சரிக்காமல் ஒரே எழுத்துபோல உச்சரிக்க வேண்டும்). இவ்வாறு உச்சரிக்கும் போது வாயில் இருந்து காற்று வெளிப்படும். இதில் "க்" என்னும் எழுத்தை உச்சரிக்கும் நேரத்தைக் குறைத்து குறைத்து உச்சரித்துப் பாருங்கள். கால் மாத்திரைக்கும் குறைவான நேரம் "க்"உடன் "க" சேர்ந்து காற்று வெளிப்படுமாறு உச்சரிக்கும் போது இந்த எழுத்தின் சரியான உச்சரிப்பு வரும்.
இதை "க்க" என்று சொல்லக்கூடாது தான். இருந்தாலும் இதன் உச்சரிப்பை விளக்க வேண்டி அவ்வாறு கூறினேன். இதன் சரியான உச்சரிப்பைப் புரிந்து  விட்டீர்களானால் "க்க" என்பதை மறந்து விடுங்கள். இது இரண்டாவது க-முதல் க வின் காற்றோசை வடிவம்-முதல் "க" வை காற்று வெளிப்படுமாறு உச்சரிப்பது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை தமிழில் குறிப்பிட க2 எனக் குறிப்பிடுவர். இப்போது ख வில் சில வார்த்தைகளைக் காண்போம்.
 खाना - கா2னா- Khaanaa - சாப்பாடு
लिखना - லிக்2னா - Likhnaa - எழுதுதல்
सीखना - சீக்2னா - Seekhnaa - கற்றல்
 முதல் வார்த்தையின் ஆரம்பத்தில் ख வானது आ மாத்ராவுடன் உள்ளது, இரண்டாவது மூன்றாவது வார்த்தைகளில், இரண்டாவது எழுத்தாக ख உள்ளது.


இது மூன்றாவது "க".


வரிசையில் மூன்றாவது எழுத்து அழுத்தமான உச்சரிப்பு கொண்டது என முன்பே பார்த்தோம். அதாவது முதல் எழுத்து Ka , மூன்றாவது எழுத்து Ga. இதை தமிழில் க3 எனக் குறிப்பிடலாம். ஆங்கிலத்தின் GA என்பதைப் போல உச்சரிக்க வேண்டும். தமிழில் கணபதி-Ganapathy கணேஷ்- Ganesh என்பதில் உள்ள "க" வைப்போல் உச்சரிக்க வேண்டும்.
                    இதை எழுதுவது மிக சுலபம். இதை எழுதும் முறை படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ग வில் சில வார்த்தைகள்
गाना - கா3னா - GAANAA - பாட்டு
गाल - கா3ல்  - GAAL - கன்னம்
ஹிந்தியில் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு அவசியம். சிறிய உச்சரிப்பு வேறுபாடும் வேறு அர்த்தத்தைத் தரும்.
खाना- கா2னா- KHAANAA  என்றால் சாப்பாடு. गाना-கா3னா - GAANAA என்றால் பாட்டு, உச்சரிப்பில் சிறிய மாறுபாடும் அர்த்தத்தை மாற்றிவிடும். எனவே சரியான உச்சரிப்பு அவசியம்.


இது நான்காவது க.
இது மூன்றாவது "க" வின் காற்றோசை சேர்ந்த வடிவம். மூன்றாவது "க" வை காற்று வெளிப்படுமாறு உச்சரிக்கும் போது இந்த ஓசை வரும். அதாவது அழுத்தமான உச்சரிப்புடன் கூடிய காற்றோசை.
இதனை எழுதுவதும் மிக எளிதே. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
घ வில் சில வார்த்தைகள்.
घोड़ा - கோ4டா- GHODAA- குதிரை
घर - க4ர் - GHAR - வீடு


வரிசையில் ஐந்தாவது எழுத்து நாசிக எழுத்து, அதாவது தமிழில் கூறப்படும் மெல்லின மெய் எழுத்து.
இந்த எழுத்தானது க வுக்கு இனமான  மெல்லின எழுத்தான ங ஆகும். தமிழில் ஒரு "க" வுக்கு இனமாக ஒரு "ங" உள்ளது. ஹிந்தியில் உள்ள நான்கு "க" வுக்கும் இனமாக ஒரு மெல்லின எழுத்து( நாசிக எழுத்து) உள்ளது.
                      தமிழைப் போலவே ஹிந்தியிலும் "ங" ஆனது வார்த்தையில் ஆரம்பத்தில் வராது, மேலும் தமிழைப் போலவே இந்த எழுத்தின் உபயோகம் ஹிந்தியிலும் மிகக் குறைவே. ஹிந்தில் இந்த எழுத்து போட வேண்டிய இடத்தில் அனுஸ்வர் இட்டுக் கொள்ளலாம்,
எனவே ஹிந்தி வார்த்தைகளில் இந்த எழுத்தைக் காண்பது அரிது.

க வரிசையில் உள்ள ஐந்து எழுத்துக்களையும் உச்சரித்து எழுதிப் பழகுங்கள். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comment செய்யுங்கள்.



திங்கள், 30 ஜூலை, 2018

ஹிந்தி உயிரெழுத்துக்கள் अं अँ - நாசிக ஓசை மற்றும் अः

अं अँ अः இந்த மூன்றும் உயிர் எழுத்துக்கள் கிடையாது. இவை ஓசையைக் குறிக்கும் குறியீடுகள் மட்டுமே. இந்த ஓசைகளைக் குறிப்பிட முதல் உயிர் எழுத்தான  अ வுடன் இந்தக் குறியீடுகள் இடப்பட்டுக் காட்டப்படுகிறது. அகராதியில் இந்த ஓசைகள் உயிர் எழுத்துகளுக்குப் பின் வருவதால் இவை பொதுவாக உயிர் எழுத்துக்களுடன் சேர்த்து எழுதப்படுகிறது. ஆனால் இவை உயிர் எழுத்துக்கள் கிடையாது, நாசிக ஓசை மற்றும் ஹ ஓசையின் குறியீடுகள் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாசிக ஓசை:

இந்தக் குறியீடு अनुसवर-அனுஸ்வர் எனவும் இது चँद्रबिंदु - சந்த்ரபிந்து எனவும் அழைக்கப்படும்.
இந்த இரண்டு குறியீடுகளும் ஹிந்தியில் நாசிக ஓசையைக் குறிக்கப் பயன்படுகிறது. நாசி என்றால் மூக்கு என்பது நாம் அறிந்ததே. நாசிக ஓசை என்பது "நாசி" அதாவது "மூக்கு" மூலம் எழுப்பப்படும் ஓசை ஆகும். குரல்வளையில் இருந்து வரும் காற்றைத் தடுத்து நாசி வழியே அனுப்புவதால் நாசிக ஓசை பிறக்கிறது.





நாசிக ஓசை
ஓர் உயிரெழுத்தின் மீது இந்தக் குறியீடுகள் இடப்படும் போது, அந்த உயிரெழுத்து நாசிக ஓசை பெறும்.

இந்த நாசிக ஓசையானது நம் பேச்சு வழக்கு தமிழில் பெருமளவில் உபயோகத்தில் உள்ளது. ஆனால் இதைக் குறிப்பிட தமிழில் எழுத்துக்களோ குறியீடுகளோ இல்லை.
               இந்த நாசிக ஓசை என்பது என்ன என்று இனி பார்ப்போம்.
தமிழில் எழுத்து வழக்கு மொழிக்கும் பேச்சு வழக்கு மொழிக்கும் உள்ள வித்யாசமே இந்த நாசிக ஓசை தான்.
               எழுத்து வழக்கில் நாசிக ஓசைகள் இல்லாமல் செந்தமிழில் எழுதுகிறோம், பேச்சு வழக்கில் செந்தமிழ்ச் சொற்களுடன் நாசிக ஓசை சேர்த்து பேசுகிறோம்.
              "உன் பெயர் என்ன?" என்று தமிழில் எழுத்து வழக்கில் எழுதுகிறோம். ஆனால் பேசும் போது?
"ஊன் பேரு என்ன?" என்று தான் கேட்கிறோம்.
இரண்டு வழக்கிலும் "உன்" என்னும் வார்த்தையை மட்டும் கவனியுங்கள். "உன்" என்னும் வார்த்தையின் உச்சரிப்பு எப்படி மாறுகிறது என்பதைக் கவனியுங்கள், குறிப்பாக "உன்" என்னும் வார்த்தை "ஊன்" என மாறும்போது அந்த வார்த்தையின் முடிவில் உச்சரிப்பைக் கவனியுங்கள். பேச்சு வழக்கை "ஊன் பேரு என்ன? என எழுதினாலும் "ஊன்" என்னும் வார்த்தையில் "ன்" முழுமையாக உச்சரிக்கப் படுவதில்லை. ஊ~ பேரு என்ன என்றுதான் உச்சரிக்கப்படுகிறது.
                  இதேபோலவே "ஏன்?" என்னும் வார்த்தை எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் எப்படி உச்சரிக்கப்படுகிறது என உற்று நோக்குங்கள். எழுத்து வழக்கில் "ஏன்" என்பதில்  "ன்"  முழுமையாக உச்சரிக்கப்படுகிறது. பேச்சு வழக்கில் "ஏ~" என "ன்" முழுமையாக உச்சரிக்கப்படாமல், "ன்" என்ற எழுத்தின் ஓசை மாறுபட்ட ஓசையாக உச்சரிக்கப்படுகிறது. இந்த ஓசையே நாசிக ஓசையாகும். மீண்டும் உச்சரித்துப் பாருங்கள். இந்த ஓசையின் போது காற்று நாசி வழியே செல்வது தெரியும்.
                  தமிழில் நாம் பேச்சு வழக்கில் உபயோகிக்கும் பெரும்பாலான வார்த்தைகள் இந்த நாசிக ஓசை கொண்டவையே. "ஆம்" என்பதை நாம் பேச்சு வழக்கில் சொல்லும் "ஆன்"

பேச்சி வழக்கில் நாம் சொல்லும் "ஏன்" = ஏ+நாசிக ஓசை
பேச்சு வழக்கில் உன் (ஊன்)= ஊ+நாசிக ஓசை.

இந்த நாசிக ஓசையை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஹிந்தியில் இந்த ஓசை மிக முக்கியம். ஹிந்தியில் முக்கியமான பல வார்த்தைகளில் இந்த நாசிக ஓசை உள்ளது. எனவே சரியாக ஹிந்தி பேச, இந்த நாசிக ஓசையை சரியாக உச்சரிக்கக் கற்றுக் கொள்வது அவசியம்.
                 இனி ஹிந்தியில் நாசிக ஓசை கொண்ட சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
               हाँ - ஹான்- Haan - ஆம்.
தமிழில் நாசிக ஓசையைக் குறிப்பிட குறியீடு எதுவும் இல்லையென்பதால், हाँ  என்பதை தமிழில் "ஹான்" எனக் குறிப்பிட்டுள்ளேன். இங்கு ஹான் என்பது ஹா+நாசிக ஓசை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
             मैं - மெய்ன்- Mein - நான்
என்பதை "மைன்" என உச்சரிக்கக் கூடாது. ஹிந்தியில் ஐ ஓசை இல்லை, ஹிந்தியில் இருப்பது "எய்" ஓசையென முன்பே கூறியிருக்கிறேன். இதை மெய்ன் -Mein என்றுதான் உச்சரிக்க வேண்டும். மைன் என உச்சரிக்கக் கூடாது.
           आँसू - ஆன்சூ - Aansuu - கண்ணீர்
முதல் இரண்டு வார்த்தைகளில் இறுதியில் நாசிக ஓசை இருந்தது. இந்த வார்த்தையில் நடுவே, அதாவது आ வுக்கும் सू வுக்கும் இடையே நாசிக ஓசை உள்ளது.
தமிழில் ஆன்சூ என எழுதி இருப்பதால், ஆன்சூ எனப் படிக்கக் கூடாது. நாசிக ஓசையைக் குறிக்கவே "ன்" இடப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
            அனுஸ்வர் சந்த்ரபிந்து இரண்டு குறியீடுகளுமே நாசிக ஓசையைத் தான் குறிக்கும் என முன்பே கூறினேன். ஹிந்தி வார்த்தைகளைப் படிக்கும் போது ஓர் எழுத்தின் மேல் அனுஸ்வர் அல்லது சந்த்ரபிந்துவைப் பார்த்தால், நாசிக ஓசையோடு உச்சரிப்பீர்கள். எழுதும் போது தான் குழப்பம் வரும், எங்கு அனுஸ்வர் இடுவது, எங்கு சந்த்ரபிந்து இடுவது என்று.
மிகவும் எளிதானதே. நாசிக ஓசை சேர்க்க வேண்டிய எழுத்தின் கோட்டின் மேலே ஏதனும் இருந்தால் வெறும் புள்ளி மட்டும் (அனுஸ்வர்) இட வேண்டும். கோட்டின் மேலே எதுவும் இல்லையெனில் பிறை போட்டு புள்ளி இட வேண்டும்.(சந்த்ரபிந்து)

         हाँ   आँसू என்பதில் முதல் எழுத்தின் கோட்டிற்கு மேலே எதுவும் இல்லை, வெறும் புள்ளி இட்டால் தெரியாமல் போகும். எனவே புள்ளியைக் காட்ட புள்ளிக்குக் கீழே பிறை இடப்படுகிறது. அதுவே சந்த்ரபிந்து.
          मैं என்பதில் கோட்டிற்கு மேலே ஏற்கெனவே கோடுகள் உள்ளதால் பிறை போட இடம் இல்லை. எனவே வெறும் புள்ளி மட்டும் இடப்படுகிறது.



         இது "விசர்கம்- विसर्ग" எனப்படும். இந்தக் குறியீட்டை தமிழில் உள்ள "ஃ"  ஓடு ஒப்பிட்டு சிலர் கூறுவர். எனினும் இது "ஃ" போன்ற உச்சரிப்பு கொண்டதல்ல.
இது மென்மையான ஓசை கொண்டது. "ஃ" கடினமான ஓசை கொண்டது.
          இதன் உச்சரிப்பை எளிமையாக விளக்க வேண்டுமானால் கேளுங்கள். உங்களுக்கு "ஸ்வாஹா" சொல்லத் தெரியுமா? பிராமணர்கள், பூசாரிகள் மந்திரம் ஓதுவதைக் கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் மந்திரம் படித்திருக்கிறீர்களா? மந்திரத்தின் முடிவில் " ஸ்வாஹா" என்று சொல்வார்கள் அல்லவா. அந்த ஸ்வாஹ வில் இறுதியில் இருப்பது இந்த ः குறியீடுதான். ( स्वाः - ஸ்வாஹா)
              விசர்கம் "ஹ" என்பதைப் போன்ற ஓசை கொண்டது. ஆனால் இது தனக்கு முன்பு உள்ள உயிரெழுத்தின் ஓசையைப் பெறும். இது பெரும்பாலும் வார்த்தையின் இறுதியில் தான் வரும்.
स्वाः என்பதில் இறுதியில் உள்ள ः உள்ளது, அதன் முன்பு உள்ள உயிரெழுத்து ஆ-आ  (வ்+ஆ=வா - व+आ =वा), எனவே ः ஆனது ஹ்+ஆ= ஹா என்னும் ஓசையை பெறும்.    (ஹ்+ முன்பு உள்ள உயிரெழுத்தின் ஓசை) எனவே ஸ்வாஹா என்னும் உச்சரிப்பு வந்தது.
               சமஸ்கிருதத்தில் இருந்து வந்த வார்தைகளில் மட்டுமே இந்தக் குறியீடு இருக்கும். பொதுவாக ஹிந்தியில் இந்தக் குறியீட்டின் உபயோகம் மிகக் குறைவுதான்.


   
         இன்றைய பாடம் இத்தோடு முடிகிறது. இன்றைய பாடம் உங்களுக்குப் புரிந்தாலோ, புரியவில்லையென்றாலோ, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ Comment செய்யுங்கள்.

                     

ஹிந்தி மெய் எழுத்துக்கள் விளக்கம் - ஹிந்தியில் நான்கு க நான்கு ச இருப்பது ஏன்?

ஹிந்தி உயிரெழுத்துக்கள் கற்றுக் கொண்டு விட்டோம்.
இனி ஹிந்தியில் உள்ள மெய் எழுத்துகளைக் கற்போம். 
ஹிந்தியில் மெய் எழுத்துக்கள் "व्यंजन अक्षर" - VYANJAN AKSHAR-வ்யஞ்சன் அக்ஷர் என்று அழைக்கப்படும். அக்ஷர் என்றால் எழுத்து என்று அர்த்தம். உயிர் எழுத்துக்கள் "ஸ்வர் அக்ஷர் என்று அழைக்கப்படும்.

தமிழ் மெய்யெழுத்து வரிசை போலவே ஹிந்தியிலும் எழுத்துக்கள் பிறக்கும் இடத்தைப் பொறுத்து வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. தமிழில் 18 மெய் எழுத்துக்கள் மட்டுமே உள்ளன. ஆனால் ஹிந்தியில் 33 மெய் எழுத்துக்கள் உள்ளன.
ஹிந்தியில் க வரிசை ச வரிசை ட வரிசை த வரிசை ப வரிசை என ஐந்து வரிசை, ஒவ்வொரு வரிசையிலும் ஐந்து எழுத்துக்களும்,
நான்கு இடையின எழுத்துக்களும்,
காற்றெழுத்துக்கள் நான்கும்
என மொத்தம் 33 எழுத்துக்கள் உள்ளன.
க வரிசை எழுத்துக்கள் தொண்டையிலிருந்து பிறக்கும். இவை ஆங்கிலத்தில் GUTTURALS அல்லது  VELAR CONSONANTS என அழைக்கப்படும். இதில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன.
"ச" வரிசை எழுத்துக்கள் அண்ணத்தில்(PALATE) இருந்து பிறக்கும். எனவே இவை PALATAL CONSONANTS என அழைக்கப்படும்.
"ட" வரிசை எழுத்துக்கள் நுனி நாக்கு மற்றும் அண்ணத்தில் தோன்றும். இவை RETROFLEX CONSONANTS என்று அழைக்கப்படும்.
"த" வரிசை எழுத்துக்கள் நுனி நாக்கு மேற்பல்லோடு பொருந்துவதால் தோன்றுகிறது. பற்களில் தோன்றுவதால் இவை DENTAL  CONSONANTS என அழைக்கப்படும்.
"ப" வரிசை எழுத்துக்கள் மேல் கீழ் உதடுகள் பொருந்துவதால் தோன்றுகிறது. உதடுகளில் தோன்றுவதால் இவை LABIAL CONSONANTS என்று அழைக்கப்படுகிறது.

தமிழில் மெய் எழுத்தில் ஒரு "க" ஒரு "ச" ஒரு "ட"  மட்டுமே உள்ளது. ஆனால் ஹிந்தியில் 4 வித "க" உள்ளன.
தமிழர்களுக்கு ஹிந்தி பற்றி பயத்தை உண்டாக்குவதில் இதுவும் ஒன்று. நமக்கு ஒரு க தானே தெரியும், Ka, Kha, Ga, Gha என்று நான்கு க எப்படி வந்தது அதை எப்படி உச்சரிப்பது என்று குழப்பம் உண்டாகிவிடுகிறது
தமிழில் ஒரு "க" இருந்த போதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட க ஓசைகள் தமிழில் உள்ளன.
இதைப் புரிந்து கொண்டாலே போதும் ஹிந்தியில் உள்ள நான்கு நான்கு எழுத்துக்கள் பற்றிய பயம் நீங்கி தெளிவு உண்டாகிவிடும்.

"கண்" என்னும் தமிழ் வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்.
Kan என்றுதான் உச்சரிக்கிறோம். அதாவது ஆங்கில Ka க்கு உண்டான ஓசையில்தான் உச்சரிக்கிறோம். இதுவே சாதாரண "க" ஆகும்.(முதல் க) இதை உச்சரிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை.
இப்போது "கங்கா"  என்னும் வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்.
Ganga என்று தான் உச்சரிப்பீர்கள், Kanga என்று உச்சரிக்க மாட்டீர்கள்.
இதுபோலவே கணேஷ் என்னும் வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள். "க" வை தொண்டையில் அழுத்தம் கொடுத்து "GA"NESH என்று தான் உச்சரிப்போம்.

அங்கே இங்கே போன்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அதிலுள்ள "ங்" கை அடுத்து வரும் "க" வானது அழுத்தமான க ஓசையில் (GA)  தான் உச்சரிக்கிறோம். நாம் சாதாரண க ஓசையில் உச்சரிக்க முயற்சித்தாலும் இயலாது, முயற்சி செய்து பாருங்கள்.
ANKE என்று உச்சரித்துப் பாருங்கள். ANGE என்று தான் வரும். அதுதான் இயல்பான உச்சரிப்பு. ANKE என்று உச்சரிப்பது இயல்பாக தானாக ஓடும் நீரை நாம் தடுத்து நிறுத்துவது போல தோன்றும்.
தமிழ் சமஸ்கிருதம் போன்ற மொழிகள், நீர் போல இயல்பாக ஓடும் உச்சரிப்பு கொண்டவை, அதன் அடிப்படையிலேயே எழுத்துக்கள் உச்சரிப்பும் வார்த்தைகள் புணர்ச்சியும் இயல்பாக ஓடுவது போலவே இருக்கும்.
நாசிக மெய்யை அடுத்து (ங்) வரும் வல்லின எழுத்து (க) அழுத்தமான ஓசையுடன்(GA) தான் வரும் என பழங்கால தமிழ் இலக்கண நூலகளில் விதியே உள்ளது. தமிழில்
இதிலிருந்து "க" விற்கு இயல்பான(சாதாரணமான) உச்சரிப்பு ஒன்று(KA), அழுத்தமான உச்சரிப்பு ஒன்று(GA) உள்ளது என்பது புரிகிறது.
எனவே தமிழில் உள்ள "க" என்னும் எழுத்திற்கு "KA" "GA" என்று இரண்டு உச்சரிப்பு உள்ளது தெளிவு.

இதேபோலவே "தம்பி" "தண்ணீர்" என்பதில் உள்ள "த" சாதாரண "த-Tha" ஆகும். ஆனால் "தர்மம்" "தயவு" என்பதை உச்சரித்துப் பாருங்கள். "Dha" என்னும் உச்சரிப்பு தான் வரும். தம்பி-THAMBI, தண்ணீர்-THANNEER, தர்மம்- DHARMAM, தயவு-DHAYAVU
மேலும் "பழம்" "பல்" என்பதில் உள்ள "ப" சாதரண "ப-Pa", ஆனால்  பலம், பலசாலி ஆகிய வார்த்தைகளில் உள்ள "ப" வை "Ba" என்று தான் உச்சரிக்கிறோம். பலம்-BALAM, பலசாலி-BALASALI
இவ்வாறு
"க" விற்கு Ka மற்றும் Ga
"ச" விற்கு Cha மற்றும் Ja
"ட" விற்கு Ta மற்றும்  Da
"த" விற்கு Tha மற்றும் Dha
"ப" விற்கு Pa மற்றும் Ba
என ஒவ்வொரு எழுத்திற்கும் இரண்டு உச்சரிப்பு விளங்கியிருக்கும்.
இதில் முதலிலுள்ளது சாதாரண உச்சரிப்பு, இரண்டாவதாக உள்ளது அழுத்தமான உச்சரிப்பு. சாதாரண உச்சரிப்பு கொண்ட எழுத்துக்களை Unvoiced Consonants என்றும், அழுத்தமான உச்சரிப்பு கொண்ட எழுத்துக்களை Voiced Consonants அழைப்பர்.
(குறிப்பு: தமிழில் ச வின் அழுத்தமான உச்சரிப்பான "JA" விற்கு சில இடங்களில் "ஜ" என்னும் கிரந்த எழுத்தை உபயோகிக்கிறோம், ச வின் அழுத்தமான உச்சரிப்பு வடிவம் தான் ஜ ஆகும். இருந்தாலும் இஞ்சி, பஞ்சம், மஞ்சம் போன்ற வார்த்தைகளைக் கவனியுங்கள். இறுதியில் உள்ள "சி"யானது "ஜி" என்றே உச்சரிக்கப்படுகிறது. இஞ்சி- INJI, பஞ்சம்-PANJAM, மஞ்சம், MANJAM. முன்பே சொன்னேன் அல்லவா. தமிழில் நாசிக மெய்யை அடுத்து (ங் ஞ் ண் ந் ம் ) வரும் வல்லின எழுத்து (க ச ட த ப) அழுத்தமான ஓசையுடன்(GA, JA, DA, DHA, BA) தான் வரும் என பழங்கால தமிழ் இலக்கண நூல்களில் விதியே உள்ளது


க ச ட த ப ஆகிய ஒவ்வொரு எழுத்துக்கும் ஹிந்தியில் நான்கு எழுத்துக்கள் உள்ளன என்று பார்தோம் அல்லவா. அவற்றில் இரண்டு எழுத்துக்களில் உச்சரிப்பு பற்றி விளங்கிக் கொண்டிருப்பீர்கள்.
மீதமுள்ள இரண்டு எழுத்துக்களின் உச்சரிப்பு பற்றி இனி பார்ப்போம்.
"காலை" என்ற தமிழ் வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்.
இதில் உள்ள "கா" சாதாரண க ஓசை.
இப்போது Coffee-காஃபீ என்ற வார்த்தையை உச்சரித்துப் பாருங்கள்.
முதலில் சொன்ன "கா" வுக்கும் இதில் உள்ள "கா" வுக்கும் வித்தியாசம் தெரிகிறதா?
மீண்டும் சில முறை உச்சரித்துப் பாருங்கள், புரியும்.
"காலை" என்பதில் உள்ள "கா" எந்த முயற்சியும் இல்லாமல் வரும் சாதாரண "கா".
ஆனால் Coffee யில் உள்ள "கா" சிறிது முயற்சியுடன், சிறிது அதிக காற்றுடன் உச்சரிக்கப்படும். அதாவது "க்காஃபீ" என்று உச்சரிக்கப்படும். "க்கா" என்பதை "இக்கா" என உச்சரிக்காமல் "க்"-கை மிகக் குறைந்த நேரம்(கால் மாத்திரைக்கும் குறைவான நேரம்) ஒலிக்கும்போது அதிக காற்றுடன் "க" ஓசை பிறக்கும். இவ்வாறு ஓர் மெய் எழுத்தை அதிக காற்றுடன் உச்சரிப்பதை ஆங்கிலத்தில் Aspiration என்றும் அந்த எழுத்தை Aspirated Consonant  என்றும் அழைப்பர்.
தமிழில் காற்றோசை எழுத்துக்கள் என அழைக்கலாம்.
ஒவ்வொரு வரிசையிலும் உள்ள இரண்டாவது மற்றும் நான்காவது எழுத்துக்கள், அதன் முந்தைய எழுத்தின் காற்றோசை வடிவம் ஆகும்.
அதாவது முதல் எழுத்து சாதரண ஓசை, இரண்டாவது சாதாரண ஓசையுடன் காற்றோசை, மூன்றாவது ஓசை அழுத்தமான ஓசை, நான்காவது எழுத்து அழுத்தமான ஓசையுடன் சேர்ந்த காற்றோசை.
क + காற்றோசை= ख
ग  + காற்றோசை= घ
च  + காற்றோசை= छ
ज  + காற்றோசை= झ
சாதாரண ஓசையை unvoiced unaspirated என்றும்
சாதாரண ஓசையோடு சேர்ந்த காற்றோசையை Unvoiced Aspirated என்றும்
அழுத்தமான ஓசையை Voiced unaspirated என்றும்
அழுதமான ஓசையோடு சேர்ந்த காற்றோசையை Voiced Aspirated என்றும் ஆங்கிலத்தில் கூறுவர்.



                 ஹிந்தி மெய் எழுத்துக்களையும் அவற்றின் ஆங்கில இணை ஓசையையும், தமிழ் இணை எழுத்துக்களையும்  மேலே உள்ள படத்தில் பார்க்கலாம்
                  தமிழில் ஒரு "க" எழுத்து மட்டுமே உள்ளதால், ஹிந்தியில் உள்ள, நான்கு "க" வைக் குறிக்க க1, க2, க3, க4 என குறிப்பிடப்படுகிறது.
இதில் க1 என்பது சாதரண க  (முதல் க),
க2 என்பது முதல் க வுடன் காற்றோசை சேர்ந்தது. (இரண்டாவது க)
க3 என்பது அழுத்தமான க  (மூன்றாவது க)
க4 என்பது மூன்றாவது க வுடன் காற்றோசை சேர்ந்தது. (நான்காவது க)
இதேபோலவே ட வரிசை, த வரிசை, ப வரிசை எழுத்துக்களுக்கும் 1,2,3,4 என எண்கள் குறிப்பிடப்படுகிறது. ச வரிசையின் அழுத்தமான ஓசையான மூன்றாவது ஓசையைக் குறிக்க தமிழில் ஜ என்ற கிரந்த எழுத்தை உபயோகிப்பதால், அந்த வரிசைக்கு மட்டும் ச1 ச2 ச3 ச4 என்பதற்குப் பதிலாக ச1 ச2, ஜ1, ஜ2 எனக் குறிப்பிடுகிறோம்.






          ஹிந்தி மெய் எழுத்துக்களையும் அவற்றின் ஆங்கில இணை ஓசையையும், தமிழ் இணை எழுத்துக்களையும்  மேலே உள்ள படத்தில் பார்க்கலாம்
                  தமிழில் ஒரு "க" எழுத்து மட்டுமே உள்ளதால், ஹிந்தியில் உள்ள, நான்கு "க" வைக் குறிக்க க1, க2, க3, க4 என குறிப்பிடப்படுகிறது.
இதில் க1 என்பது சாதரண க  (முதல் க),
க2 என்பது முதல் க வுடன் காற்றோசை சேர்ந்தது. (இரண்டாவது க)
க3 என்பது அழுத்தமான க  (மூன்றாவது க)
க4 என்பது மூன்றாவது க வுடன் காற்றோசை சேர்ந்தது. (நான்காவது க)
இதேபோலவே ட வரிசை, த வரிசை, ப வரிசை எழுத்துக்களுக்கும் 1,2,3,4 என எண்கள் குறிப்பிடப்படுகிறது. ச வரிசையின் அழுத்தமான ஓசையான மூன்றாவது ஓசையைக் குறிக்க தமிழில் ஜ என்ற கிரந்த எழுத்தை உபயோகிப்பதால், அந்த வரிசைக்கு மட்டும் ச1 ச2 ச3 ச4 என்பதற்குப் பதிலாக ச1 ச2, ஜ1, ஜ2 எனக் குறிப்பிடுகிறோம்.

 

தமிழ்-ஹிந்தி மெய் எழுத்துக்கள் ஒப்பீடு

       தமிழில் க ச ட த ப ற என்று ஆறு வல்லின மெய் எழுத்துக்கள் உள்ளன. இவற்றில் ற வைத் தவிர மீதி ஐந்து எழுத்துக்கள் அவற்றின் நான்கு விதமான் ஓசைகளுடன் ஹிந்தியில் உள்ளன.

ங ஞ ண ந ம ன என ஆறு மெல்லின மெய் எழுத்துக்கள் தமிழில் உள்ளன. இவை முறையே வல்லின எழுத்துக்களுக்கு இன எழுத்துக்களாகும். இதேபோல ஹிந்தியிலும் ஐந்து வரிசை வல்லின எழுத்துக்களுக்கும் இணையான மெல்லின எழுத்துக்கள் ங ஞ ண ந ம உள்ளன(ன வைத் தவிர).
தமிழில் ய ர ல வ ள ழ என ஆறு இடையின எழுத்துக்கள் உள்ளன.
இவற்றில் ய ர ல வ ஆகியவையே உண்மையில் இடையின எழுத்துக்கள். அவை நான்கும் ஹிந்தியில் உள்ளன. ள மற்றும் ழ ஆனது ல வின் ஓசை வேறுபாட்டால் தோன்றுவதாகும். ஹிந்தியில் இவற்றின் உபயோகமில்லையெனினும் இவற்றின் உச்சரிப்பிற்கு இணையான எழுத்துக்கள் உள்ளன. அவை நமக்குத் தேவையில்லை.
ற என்னும் தமிழ் வல்லின எழுத்தானது ட் மற்றும் ர் இணைவால் தோன்றியது. இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை கொண்டது. எகா. கற்பு- சிலர் கர்பு என்றும் சிலர் கட்பு என்றும் உச்சரிப்பர். இங்கு ற் ஆனது, ட் மற்றும் ர் இரண்டிற்கும் இடைப்பட்ட உச்சரிப்பு கொண்டது.
சில இடங்களில் ற் ஆனது ட்+ர் இரண்டும் சேர்ந்த உச்சரிப்பு கொண்டது.
இரண்டிற்கும் இடைப்பட்ட உச்சரிப்பு என்பது வேறு, இரண்டும் சேர்ந்த உச்சரிப்பு என்பது வேறு.
எகா. காற்று= கா ட்+ர் று
ஹிந்தியிலும் இதுபோல இரண்டு எழுத்துக்கள் உள்ளன. அவை ட வரிசையில் மூன்றாவது எழுத்து மற்றும் நான்காவது எழுத்தில் புள்ளி வைத்து எழுதப்படும். அவற்றைப் பின்பு ஒரு பாடத்தில் காண்போம்.
Incomplete.. Will be complete soon