செவ்வாய், 31 ஜூலை, 2018

ஹிந்தி மெய் எழுத்துக்கள் - क வரிசை

   
                           இன்று ஹிந்தி மெய் எழுத்துக்களில் க வரிசை எழுத்துக்களைக் கற்போம்.


ஹிந்தி க வரிசை மெய் எழுத்துக்கள் - Hindi Consonants क Varg


முன்பே சொன்னது போல ஒரு வரிசையில் உள்ள ஐந்து எழுத்துக்களில் முதல் எழுத்து, சாதாரண ஓசை,இரண்டாம் எழுத்து சாதாரண ஓசையுடன் அதிக காற்றோசை, மூன்றாம் எழுத்து அழுத்தமான ஓசை , நான்காம் எழுத்து அழுத்தமான ஓசையுடன் சேர்ந்த காற்றோசை, ஐந்தாவது எழுத்து நாசிக ஓசை. க முதல் ப வரையுள்ள ஐந்து வரிசை எழுத்துக்களும் இதே வரிசை முறை தான். இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

                            ஹிந்தியில் முதல் மெய் எழுத்து क. மெய் எழுத்துக்கள் பற்றிய விளக்கத்தில் முன்பு பார்த்தோம் அல்லவா. வரிசையில் முதல் எழுத்து சாதாரண உச்சரிப்பு. எனவே இது எந்த முயற்சியும் சிரமமும் இல்லாமல் எளிமையாக உச்சரிக்கப்படும் சாதாரண க. இது தமிழிலுள்ள "கண்" "கத்தி" என்பதில் உள்ள "க" வைப்போல உச்சரிக்கப் படுகிறது.

இதை எழுதும் முறை படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இதை எழுதுவது மிகவும் எளிதானது. மேலிருந்து கீழாக ஒரு நேர்க்கோடு போட்டு, அதன் மையத்தில் ஆரம்பித்து படுக்க வைத்த 8 போல போட வேண்டும்.
எழுத்தும் அதன் உச்சரிப்பும் மனதில் பதியும் வரை மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டே எழுதிப் பாருங்கள். எழுதுவது அனாவசியம், எழுதாமலே நான் படித்துக் கொள்ளுவேன் என்று நினைக்காதீர்கள். எழுத்துக்களை எழுதிப் படிப்பது, கற்பதை மிக எளிதாக்கும். மேலும், எழுதத் தெரியாமல் எழுத்துக்களைப் படிக்கத் தெரியாமல் ஒரு மொழியைக் கற்பது முழுமையாகாது.
இப்போது "क" வில் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
कमरा- கம்ரா-KAMRAA-அறை
कौआ-கௌஆ-KOUVAA-காக்கை
मकान-மகான்-MAKAAN-
सडक-சடக்-SAFDAK-சாலை
                                  மேலே உள்ள ஹிந்தி வார்த்தைகளைப் பார்த்து நாம் கற்ற எழுத்தான " क" வை அடையாளம் காண முயற்சியுங்கள். இதேபோல அடுத்தடுத்த எழுத்துக்களைக் கற்கக் கற்க நாம் முன்பு கற்ற அனைத்து எழுத்துக்களையும்  அடையாளம் காண முயாற்சியுங்கள். அனைத்து எழுத்துக்களையும் விரைவாகக் கற்று விடலாம்.
எழுத்துக்களைக் கற்ற பிறகே உண்மையான ஹிந்தி கற்றல் ஆரம்பாமாகும். அதற்கு முன் எழுத்துக்களைக் கற்பது அத்தியாவசியமாகும்.
முதல் இரண்டு வார்த்தைகளில் முதலில் "क" உள்ளது. ஸ்வர் அக்ஷர்-உயிர் எழுத்து மற்றும் அதன் மாத்ராக்கள் நாம் ஏற்கெனவே கற்று விட்டோம். இந்த வார்த்தைகளில் அவற்றையும் அடையாளம் காண முயற்சியுங்கள்.
இரண்டாவது வார்த்தையில் "क" வுடன் "औ मातरा- ஔ மாத்ரா" வான ौ உள்ளதைக் கவனித்திருப்பீர்கள்.
எனவே क + औ =कौ ( க்+ஔ=கௌ)
அடுத்த வார்த்தையில் இரண்டாவது எழுத்தாக क உள்ளது. மேலும் क வுடன் आ  மாத்ராவான ा உள்ளது. எனவே அது क + आ = का  (க் + ஆ= கா) என உச்சரிக்கப்படும்.
நினைவில் கொள்ளுங்கள். தமிழில் தனித்தனி உச்ரிப்பிற்கு தனித்தனி எழுத்துக்கள் இல்லாததால் க வை சிலர் ஹ என சில தமிழ் வார்த்தைகளில் உச்சரிப்பர்.
உதாரணமாக "சுகம்" என்பதை "சுஹம்" என உச்சரிப்பர். ஹிந்தியில் அவ்வாறு கூடாது. ஹிந்தியில் ஹ விற்கு தனியே வேறு எழுத்து உள்ளது. ஹிந்தி क வை ஹ என்று உச்சரிக்கக் கூடாது.

தமிழில் KA GA HA ஆகிய ,மூன்று ஓசைகளுக்கு "க" வை உபயோகிக்கிறோம்.
"ச" வை சில நேரம் CHA என்றும் சில  நேரம் SA என்றும் சில நேரம் SHA என்றும் உச்சரிக்கிறோம்.
பெரும்பாலும் ஹிந்தியில் நாம் என்ன எழுதுகிறோமோ அப்படியே தான் உச்சரிக்கிறோம். எனவே ஹிந்தி எழுத்துக்களின் உச்சரிப்பை சரியாகக் கற்றுக் கொள்ளுங்கள். பின்பு எழுத்துக்களை சேர்த்து வார்த்தைகளை உச்சரித்துப் பழகுங்கள்.
ஹிந்தியில் क என்று எழுதினால் क-(Ka-க1)  என்று தான் உச்சரிப்போம். வேறு எந்தக் குழப்பமும் இல்லை.

क வரிசையில் அடுத்த எழுத்து ख. இது முதல் க வைப்போலவே அதிகக் காற்றோடு உச்சரிக்க வேண்டும்.
இதனை ஆங்கிலத்தில் ASPIRATION என்பர். இதற்கு இந்த எழுத்தை உச்சரிக்கும் போது வாயில் இருந்து காற்று வெளியேறுமாறு உச்சரிக்க வேண்டும் என்று அர்த்தம்.
அதாவது, முதல் எழுத்து क எந்த முயற்சியும் இல்லாமல் எளிதாக சாதாரணமாக வருவது. இரண்டாவது எழுத்தானது முதல் எழுத்தின் காற்றோசை வடிவம். ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் முதல் क வின் ASPIRATED VERSION.
முதல் क வை உச்சரிக்கும் போது வாயை விட்டு காற்று வெளியே வராது. இரண்டாவது ख வை உச்சரிக்கும் போது வாயின் முன்னே கையை வைத்துப் பார்த்தால் கையில் காற்று படும் அளவுக்கு காற்று வெளிப்படும்.
இதன் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்று தோன்றினால் "க்க" என்று உச்சரித்துப் பாருங்கள்(இரண்டு தனித்தனி எழுத்தாக உச்சரிக்காமல் ஒரே எழுத்துபோல உச்சரிக்க வேண்டும்). இவ்வாறு உச்சரிக்கும் போது வாயில் இருந்து காற்று வெளிப்படும். இதில் "க்" என்னும் எழுத்தை உச்சரிக்கும் நேரத்தைக் குறைத்து குறைத்து உச்சரித்துப் பாருங்கள். கால் மாத்திரைக்கும் குறைவான நேரம் "க்"உடன் "க" சேர்ந்து காற்று வெளிப்படுமாறு உச்சரிக்கும் போது இந்த எழுத்தின் சரியான உச்சரிப்பு வரும்.
இதை "க்க" என்று சொல்லக்கூடாது தான். இருந்தாலும் இதன் உச்சரிப்பை விளக்க வேண்டி அவ்வாறு கூறினேன். இதன் சரியான உச்சரிப்பைப் புரிந்து  விட்டீர்களானால் "க்க" என்பதை மறந்து விடுங்கள். இது இரண்டாவது க-முதல் க வின் காற்றோசை வடிவம்-முதல் "க" வை காற்று வெளிப்படுமாறு உச்சரிப்பது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை தமிழில் குறிப்பிட க2 எனக் குறிப்பிடுவர். இப்போது ख வில் சில வார்த்தைகளைக் காண்போம்.
 खाना - கா2னா- Khaanaa - சாப்பாடு
लिखना - லிக்2னா - Likhnaa - எழுதுதல்
सीखना - சீக்2னா - Seekhnaa - கற்றல்
 முதல் வார்த்தையின் ஆரம்பத்தில் ख வானது आ மாத்ராவுடன் உள்ளது, இரண்டாவது மூன்றாவது வார்த்தைகளில், இரண்டாவது எழுத்தாக ख உள்ளது.


இது மூன்றாவது "க".


வரிசையில் மூன்றாவது எழுத்து அழுத்தமான உச்சரிப்பு கொண்டது என முன்பே பார்த்தோம். அதாவது முதல் எழுத்து Ka , மூன்றாவது எழுத்து Ga. இதை தமிழில் க3 எனக் குறிப்பிடலாம். ஆங்கிலத்தின் GA என்பதைப் போல உச்சரிக்க வேண்டும். தமிழில் கணபதி-Ganapathy கணேஷ்- Ganesh என்பதில் உள்ள "க" வைப்போல் உச்சரிக்க வேண்டும்.
                    இதை எழுதுவது மிக சுலபம். இதை எழுதும் முறை படத்தில் காட்டப்பட்டுள்ளது.
ग வில் சில வார்த்தைகள்
गाना - கா3னா - GAANAA - பாட்டு
गाल - கா3ல்  - GAAL - கன்னம்
ஹிந்தியில் எழுத்துக்களின் சரியான உச்சரிப்பு அவசியம். சிறிய உச்சரிப்பு வேறுபாடும் வேறு அர்த்தத்தைத் தரும்.
खाना- கா2னா- KHAANAA  என்றால் சாப்பாடு. गाना-கா3னா - GAANAA என்றால் பாட்டு, உச்சரிப்பில் சிறிய மாறுபாடும் அர்த்தத்தை மாற்றிவிடும். எனவே சரியான உச்சரிப்பு அவசியம்.


இது நான்காவது க.
இது மூன்றாவது "க" வின் காற்றோசை சேர்ந்த வடிவம். மூன்றாவது "க" வை காற்று வெளிப்படுமாறு உச்சரிக்கும் போது இந்த ஓசை வரும். அதாவது அழுத்தமான உச்சரிப்புடன் கூடிய காற்றோசை.
இதனை எழுதுவதும் மிக எளிதே. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.
घ வில் சில வார்த்தைகள்.
घोड़ा - கோ4டா- GHODAA- குதிரை
घर - க4ர் - GHAR - வீடு


வரிசையில் ஐந்தாவது எழுத்து நாசிக எழுத்து, அதாவது தமிழில் கூறப்படும் மெல்லின மெய் எழுத்து.
இந்த எழுத்தானது க வுக்கு இனமான  மெல்லின எழுத்தான ங ஆகும். தமிழில் ஒரு "க" வுக்கு இனமாக ஒரு "ங" உள்ளது. ஹிந்தியில் உள்ள நான்கு "க" வுக்கும் இனமாக ஒரு மெல்லின எழுத்து( நாசிக எழுத்து) உள்ளது.
                      தமிழைப் போலவே ஹிந்தியிலும் "ங" ஆனது வார்த்தையில் ஆரம்பத்தில் வராது, மேலும் தமிழைப் போலவே இந்த எழுத்தின் உபயோகம் ஹிந்தியிலும் மிகக் குறைவே. ஹிந்தில் இந்த எழுத்து போட வேண்டிய இடத்தில் அனுஸ்வர் இட்டுக் கொள்ளலாம்,
எனவே ஹிந்தி வார்த்தைகளில் இந்த எழுத்தைக் காண்பது அரிது.

க வரிசையில் உள்ள ஐந்து எழுத்துக்களையும் உச்சரித்து எழுதிப் பழகுங்கள். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comment செய்யுங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக