வெள்ளி, 20 நவம்பர், 2015

ஹிந்தி உயிரெழுத்துக்கள் - ओ மற்றும் औ


இது ஹிந்தியின் பத்தாவது உயிரெழுத்தாகும். இது தமிழில் உள்ள 'ஓ' வைப் போல உச்சரிக்கப்படுகிறது. இதை 'ஓலை', 'ஓவியம்' என்பதில் உள்ள 'ஓ' போன்று உச்சரிக்க வேண்டும். இதனை எழுதுவதும் எளிமையானது தான். आ என்னும் எழுத்தின் மேலே ஒரு கோடு போட்டால் அது ओ ஆகி விடும். இதை எவ்வாறு எழுத வேண்டும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

ओ வின் மாத்ரா ो ஆகும். மெய் எழுத்துக்களோடு ओ சேரும்போது அவற்றோடு ो என்னும் குறியீடு சேர்க்க வேண்டும்.
क +ओ = क + ो = को
म + ओ = म + ो = मो
र + ओ = र + ो = रो
स + ओ = स + ो =सो



தமிழில் உள்ள 'ஒ' வுக்கு இணையாக ஹிந்தியில் எழுத்து இல்லை. மற்ற மொழிச்சொற்களை எழுதும் போது 'ஒ' என்னும் ஓசைக்கு 'ओ - ஓ' தான் உபயோகிக்கப்படுகிறது.
இப்போது ओ வில் சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
ओस - ஓஸ் - பனித்துளி
ओह - ஓஹ் - ஓஹோ
दोस्त - தோஸ்த் - நண்பன்
रोशनी - ரோஷ்னீ - வெளிச்சம்
रसोईघर - ரசோயீகர் - சமையலறை
மேலுள்ள வார்த்தைகளில் ओ மற்றும் அதன் மாத்ராவை அடையாளம் காண முடிகிறதல்லவா. முதல் இரண்டு வார்த்தைகளின் ஆரம்பத்தில் ओ-ஓ உள்ளது. அடுத்த இரண்டு வார்த்தைகளின் முதல் எழுத்திலும் கடைசி வார்த்தையில் இரண்டாவது எழுத்திலும் ओ வின் குறியீடு உள்ளது.


 இது ஹிந்தியில் அடுத்த உயிரெழுத்து ஆகும். இது தமிழில் உள்ள 'ஔ' போன்று உச்சரிக்கப் படுகிறது. இதை 'ஔரங்கசீப்' என்பதில் உள்ள 'ஔ' போன்று உச்சரிக்க வேண்டும். இதை எழுதுவதும் மிக சுலபம். ओ வில் மேலே இன்னொரு கோடு சேர்த்துப் போட்டால் அது औ ஆகிவிடும்.

இதன் மாத்ராவும் இதைப்போலவே மேலே இரண்டு கோடுகளைக் கொண்டது. இந்த எழுத்து எவ்வாறு எழுத வேண்டும் என்பதை படத்தில் கண்டுகொள்ளுங்கள்.

क + औ = क + ौ = कौ
म + औ = म + ौ = मौ
र + औ = र + ौ = रौ
स + औ = स + ौ = सौ
औ வில் சில சொற்களைக் காண்போம்.
औरत - ஔரத் - பெண்
औलाद - ஔலாத் - வாரிசு
औकात - ஔகாத் - அந்தஸ்து, தகுதி
कौआ - கௌஆ - காகம்
नौकर - நௌகர் - வேலைக்காரன்
மேலே உள்ள வார்த்தைகளில் औ மற்றும் அதன் மாத்ராவை அடையாளம் காண முடிகிறதா?

ஹிந்தி உயிரெழுத்துக்கள் - ए மற்றும் ऐ


இது ஹிந்தியின் எட்டாவது உயிர் எழுத்து ஆகும். இதை தமிழில் உள்ள 'ஏ' என்னும் உயிரெழுத்தைப் போல உச்சரிக்க வேண்டும். அதாவது 'ஏரியா' 'ஏடு' என்பதில் உள்ள 'ஏ' போன்று உச்சரிக்க வேண்டும்.
தமிழில் உள்ள 'எ' என்னும் எழுத்துக்கு இணையாக ஹிந்தியில் எழுத்து இல்லை. மற்ற மொழிகளின் வார்த்தைகளை ஹிந்தியில் எழுதும்போது 'எ' க்கு பதிலாக ஹிந்தியில் 'ஏ' தான் உபயோகப்படுத்தப்படுகிறது. ஏடிஎம் சென்றிருக்கிறீர்களா? அங்கு ஹிந்தியில் ஏடிஎம் என எழுதி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? एटीएम என எழுதப்பட்டு இருக்கும். ஏடிஎம்-एटीएम இதில் ஏ மற்றும் எ இரண்டுக்கும் ए தான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற மொழிச் சொற்களை நாம் ஹிந்தியில் எழுதும்போது மட்டும்தான் இப்படி. மற்றபடி ஹிந்தியில் 'எ' இல்லையென கவலை இல்லை.
இந்த எழுத்தை எப்படி எழுத வேண்டும் என படத்தில் காட்டப்பட்டுள்ளது.

ए வின் மாத்ரா े ஆகும். ए ஆனது மெய் எழுத்துக்களோடு சேரும்போது அதனோடு े என்ற குறியீடு சேர்க்க வேண்டும். இந்தக் குறியீடானது எழுத்தின் மேல் பகுதியில் சேர்க்கப்படும். அதாவது கோட்டிற்கு மேலே.
இந்த குறியீடு எவ்வாறு எழுத வேண்டும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இந்தக் குறியீடு எழுதும் போது மேலே சுழி போட்டு ஆரம்பித்தும் எழுதலாம், சுழி இல்லாமல் மேலிருந்து கீழ் ஒரு கோடு மட்டும் போட்டு எழுதலாம். இந்தக் கோட்டை கீழிருந்து மேலுமாகக் கூட சிலர் எழுதுவர். அது வலக்கை இடக்கை பழக்கமுள்ளவர்களைப் பொறுத்து மாறும். உங்களுக்கு எது எளிமையாக எழுதுவதற்கு வசதியாக உள்ளதோ அவ்வாறே எழுதிப் பழகுங்கள், ஆனால் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எழுத்தின் வடிவத்தை மாற்றி விடக் கூடாது. பொதுவாக ஹிந்தியில் எழுதும் போது எழுத்தின் பாகங்களை இடமிருந்து வலமாக எழுதுவது வழக்கம்.
இப்போது ए வை உபயோகித்து சில வார்த்தைகளைக் காண்போம்.
एक - ஏக் - ஒன்று
एतबार - எத்பார் - நம்பிக்கை
एहसास - எஹஸாஸ் - உணர்வு
केला - கேலா - வாழைப்பழம்
रेल - ரேல் - ரயில்
देश - தேஷ் - நாடு
மேலே உள்ள வார்த்தைகளில் ए மற்றும் அதன் மாத்ராவை அடையாளம் காண முடிகிறதா.
एतबार, एहसास போன்ற சில வார்த்தைகளில் ए வானது 'ஏ' என உச்சரிக்கப்படாமல் 'எ' என உச்சரிக்கப்படுகிறது.



இது ஹிந்தியின் அடுத்த உயிரெழுத்தாகும். ऐ எழுதுவது மிக சுலபம். ए இன் மேலே ஒரு கோடு போட்டால் அது ऐ ஆகிவிடும்.

தமிழில் இதற்கு இணையான உயிரெழுத்து இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இதை சிலர் தமிழில் உள்ள 'ஐ' க்கு இணையானது என்று சொல்கின்றனர். ஆனால் இந்த எழுத்து சில வார்த்தைகளில் மட்டுமே 'ஐ' என்று உச்சரிக்கப்படுகிறது. அனைத்து தமிழ்வழி ஹிந்தி புத்தகங்களிலும் இந்த எழுத்துக்கு இணையான உச்சரிப்பு "ஐ" என்றே கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு சொன்ன ऋ போல அல்லாமல் இந்த எழுத்து வழக்கமாக பல வார்த்தைகளில் உபயோகிக்கப்படும் எழுத்தாகும். எனவே இதன் சரியான உச்சரிப்பைக் கற்பது அவசியமாகும். இந்த எழுத்தை எவ்வாறு சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதை விளக்குகிறேன். கவனியுங்கள். தமிழில் உள்ள 'ஐ' என்னும் உயிரெழுத்தின் ஓசை எவ்வாறு உருவானது தெரியுமா ? சிறு வயதில் தமிழ் புத்தகங்கள் படித்திருந்தால் தெரியும். 'அ' மற்றும் 'இ' என்னும் உயிரெழுத்துக்களின் ஓசை இணைவதால் ஐ உருவாகிறது. அ+இ=>(அய்) ஐ
அதேபோல 'எ' மற்றும் 'இ' என்ற ஓசைகள் இணைந்தது தான் ऐ.
எ+இ=>எய் ( ऐ ).
இந்த எழுத்தை எய்டு(Aid) என்பதில் உள்ள எய்(ai) போல உச்சரிக்க வேண்டும்.  ஆனால் 'எய்' என்று இரண்டு தனித்தனி எழுத்துக்களைப்போல அல்லாமல் ஒரே எழுத்தைப்போல ஒரே ஓசையாக உச்சரிக்க வேண்டும். தமிழில் உச்சரிப்பைக் குறிப்பதற்காகவே 'எய்' என குறிப்பிட்டுள்ளேன்.
ऐ ஆனது மெய் எழுத்துக்களோடு சேரும்போது அதையும் இதைப்போலவே சரியாக உச்சரிக்க வேண்டும்.
क + ऐ = कै (க்+எய்=கெய்)
म + ऐ = मै (ம்+எய்=மெய்

ऐ ஆனது மெய் எழுத்துக்களோடு சேரும்போது அதனோடு ै என்ற குறியீடு சேர்க்க வேண்டும்.
இது எவ்வாறு எழுத வேண்டும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளின் வார்த்தைகளை ஹிந்தியில் எழுதும்போது 'ஐ' என்னும் ஓசைக்கு, अமற்றும் इ, அல்லது आ மற்றும் इ சேர்த்து எழுதப்படும். உதாரணமாக Website(வெப்சைட்) என்னும் ஆங்கில வார்த்தையை ஹிந்தியில் எழுதும்போது 'वेबसाइट - வெப்சாஇட்' என எழுதப்படுகிறது.
ஏனென்றால் அ மற்றும் இ என்ற இரண்டு உயிரோசைகள் சேர்ந்து தான் "ஐ" தோன்றுகிறது.
இப்போது ऐ மற்றும் அதன் மாத்ராவை உபயோகித்து சில வார்த்தைகளைக் காண்போம்.
ऐनक - எய்னக் - மூக்குக்கண்ணாடி
ऐश - எய்ஷ் - சுகபோகம்
पैर  -பெய்ர் - கால்
कैसा - கெய்ஸா - எப்படி
नैन - நெய்ன் - கண்
पैदा - பெய்தா - பிறப்பு
நினைவிருக்கட்டும், நெய்ன், கெய்ஸா, என 'நெய்' கெய்' என இரண்டு ஓசையாக உச்சரிக்க கூடாது. ஒரே ஓசையாக உச்சரிக்க வேண்டும். தமிழில் சரியான உச்சரிப்பை எழுத முடியாது என்பதால் 'நெய்' 'கெய்' என குறிப்பிட்டுள்ளேன்.
भैया, सैयाँ போன்ற வார்த்தைகளில் ै ஆனது "ஐ" என்றே உச்சரிக்கப்படுகிறது.
भैया-பைய்யா-BAIYYAA- அண்ணா
सैयाँ-சைய்யான்-SAIYYAAN-கணவன்

भैया என்னும் வார்த்தை "ஐ" ஓசையுடன் "பைய்யா" என்றே உச்சரிக்கப்படுகிறது.
சில வார்த்தைகளில் ऐ ஆனது, பேசுபவரின் வசதிக்கேற்ப "ஐ" என்றோ, "எய்" என்றோ, இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையிலோ உச்சரிக்கப்படுகிறது. 
पैसा என்ற வார்த்தை "பெய்சா" என்றே ஹிந்தியில் உச்சரிக்கப்படுகிறது. அந்த வார்த்தை தமிழில் வந்து "பைசா" என்று மாறி விட்டது.

மற்றுமொறு குறிப்பு. ए என்னும் உயிரெழுத்தில் மேலே கோடு இருக்காது. ஆனால் அதன் மாத்ராவில் (குறியீட்டில்) மேலே ஒரு கோடு இருக்கும். ऐ என்னும் எழுத்தில் மேலே ஒரு கோடு இருக்கும், ஆனால் அதன் மாத்ராவில் (குறியீட்டில்) இரண்டு கோடுகள் இருக்கும். இதைத் தெளிவாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். குழப்பிக்கொள்ள வேண்டாம்.
உயிர்மெய் எழுத்துக்களில் மேலே ஒரு கோடு இருந்தால் அங்கே 'எ' உச்சரிப்பு உள்ளது எனவும் மேலே இரண்டு கோடு இருந்தால் அங்கே 'எய்' உச்சரிப்பு உள்ளது எனவும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

ஹிந்தி உயிரெழுத்து - ऋ


இது ஹிந்தியில் ஏழாவது உயிரெழுத்து ஆகும்.
தமிழில் இதற்கு இணையாக உயிரெழுத்து இல்லை.  இது ஒரு சமஸ்கிருத உயிரெழுத்து ஆகும், இது சமஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்டது. சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சொற்களில் மட்டும்தான் இந்த எழுத்தைக் காண முடியும். பொதுவாக இந்த எழுத்தைக் கொண்ட சொற்களை அதிகமாகக் காண முடியாது. எனினும் இந்த எழுத்தின் உச்சரிப்பையும் முழுமையாக கற்பது அவசியமல்லவா..
இந்த எழுத்து 'ரு' அல்லது 'ரி' என்பது போல உச்சரிக்கப்படுகிறது.இந்த எழுத்தின் உச்சரிப்பைக் கற்பது தமிழர்களுக்கு சற்று சிரமமாகத் தோனலாம். உண்மையைச் சொன்னால் இந்த எழுத்தின் சரியான உச்சரிப்பைக் கற்பது சற்று கடினமே. தாய்மொழியாக ஹிந்தி பேசுபவர்களே இந்த எழுத்தைச் சரியாக உச்சரிப்பதில்லை. குஜராத்தி மொழியில் இதனை ரு என்றும் மராத்தி மொழியில் ரி என்றும் ஹிந்தி சமஸ்கிருதத்தில் சில இடங்களில் ரு என்றும் சிலர் ரி என்றும் தவறாக உச்சரிக்கின்றனர்.

இந்த எழுத்தின் உச்சரிப்பில் பலவிதமான குழப்பங்கள் வேறு உள்ளன. தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் இதைப் பார்த்தவுடன் 'ரு' அல்லது 'ரி' என்பது உயிர்மெய் எழுத்தாயிற்றே, இதைப் போன்ற ஓசை கொண்ட எழுத்தை உயிரெழுத்தில் எதற்கு வைத்துள்ளனர் என முதல் குழப்பம் வரலாம். பிறகு இதை 'ரு' என உச்சரிப்பதா அல்லது 'ரி' என உச்சரிப்பதா என குழப்பம் வரலாம். அனைத்தையும் நான் விளக்கிச் சொல்கிறேன். கவலை வேண்டாம்.
முன் சொன்னது போல இது சமஸ்கிருத எழுத்து ஆகும். இதன் உச்சரிப்பு 'ரி'-க்கும் 'ரு'க்கும் இடைப்பட்ட உச்சரிப்பு ஆகும். இந்த எழுத்தின் உச்சரிப்பு மிக எளிமையானது தான், நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் சரளமாக உபயோகிக்கும் உச்சரிப்பு இது.
முதலில் இது உயிர் எழுத்து என்பது எப்படி என்பதை விளக்குகிறேன்.
மொழிக்கு ஆதாரம் ஒலி எனப்படும் ஓசையே ஆகும்.
அந்த ஓசைகளை இரண்டாகப் பிரிக்கலாம், உயிர் மற்றும் மெய்.
உயிர் ஒசை என்பது தொடர்ந்து காற்று வெளிப்படுவதால் உருவாவது. மெய்யோசை என்பது வெளிப்படும் காற்றை அண்ணம், நாக்கு பல் உதடு போன்ற பாகங்களால்  தடுத்து நிறுத்துவதால் உருவாவது. உயிர் ஓசையை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்க முடியும்.
உதாரணமாக அ.........................................................................
என்று சொல்லிப் பாருங்களேன்.
காற்றறையில் காற்று தீரும் வரை அ................................................... என்று நீட்டி சொல்லிக் கொண்டே இருக்க முடியும்.
ஆ...........................................................
ஈ..............................
ஊ..........................................
ஏ.............................................
ஓ................................................
இதேபோல் எல்லா உயிர் ஓசையையும் தொடர்ந்து உச்சரிப்பில் நிலை நிறுத்த முடியும்.
ஆனால் மெய் ஓசையை அவ்வாறு நிலை நிறுத்த முடியாது.
க்.............. என சொல்லிப் பாருங்கள். சொல்ல முடியாது.
க். என ஒரு நொடியில் ஓசை நின்று போகும்.  க்................. என ஒசையை நிலை நிறுத்த முயற்சித்தால் க்...கு....உ....    என "உ" எனும் உயிர் ஓசை தான் வெளிப்படும். ஏனென்றால் காற்று தொடர்ந்து வெளிப்படுவதால் தோன்றுவது உயிர் ஓசை. காற்றை தடுத்து நிறுத்துவதால் தோன்றுவது மெய் ஓசை.
காற்றை தொண்டையில் அண்ணத்தின் பின்புறம் தடுத்து நிறுத்துவதால் உருவாவது க் என்னும் மெய்.
நடு அண்ணம் தடுத்து நிறுத்துவதால் உருவாவது ச் என்னும் மெய்,
நுனி அண்ணம் தடுத்து நிறுத்துவதால் உருவாவது ட் என்னும் மெய்,
நாக்கு பல்லில் மோதி தடுத்து நிறுத்துவதால் உருவாவது த் என்னும் மெய், உதடுகள் தடுத்து நிறுத்துவதால் உருவாவது ப் என்னும் மெய்.

பொதுவாக எந்த ஒரு உயிரழுத்தையும் நாம் உச்சரிக்கும் போது நாக்கு வேறு எந்த பாகத்தையும் தொடாது. अ... आ...इ...ई...उ...ऊ...ए...ऐ...ओ...औ... உச்சரித்துப் பாருங்களேன்.

கீ..............(ஈ)
பு...........................(உ)
மே......................(ஏ)
இந்த எழுத்துக்களை உச்சரித்துப் பாருங்கள். இவற்றை ஓசை மாறாமல் நீண்ட நேரம் உச்சரிக்க முடியவில்லை அல்லவா, உயிர் எழுத்தின் உச்சரிப்பு வந்துவிடுகிறது அல்லவா. அதாவது நீட்டி உச்சரிக்கும்போது மெய் எழுத்தின் ஓசை மறைந்து உயிரெழுத்தின் ஓசைதான் நிலையாக நிற்கிறது. உயிரெழுத்துக்களை மட்டும் ஓசை மாறாமல் நீண்ட நேரம் உச்சரிக்க முடியும்.
உயிர் எழுத்து ஓசை மெய் எழுத்து ஓசை உயிர்மெய் எழுத்து ஓசை என்றால் என்னவென்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ய்...................................
ர்....................................
ல்.....................................
வ்....................................
இந்த எழுத்துக்களை
உயிர் எழுத்து, மெய் எழுத்து தவிர இரண்டிற்கும் இடைப்பட்ட எழுத்துக்கள் உள்ளன. இவற்றை தமிழில் இடையின மெய் என்பர்.  மற்ற மொழிகளில் Half Consonants அல்லது Half Vowels என்று அதாவது அரை உயிர் அரை மெய் என்று  அழைப்பர்.
ய, ர, ல, வ ஆகிய நான்கும் இந்த வகை ஆகும். தமிழில் "ல" ஓசை வேறுபாட்டால் "ல" "ள" "ழ" என்று மூன்று ல ஓசைகள் உள்ளன. ஆனால் அசலில் இடையின எழுத்துக்கள், அதாவது உயிருக்கும் மெய்க்கும் இடைப்பட்ட எழுத்துக்கள் ய ர ழ வ என்ற நான்கு எழுத்துகளே ஆகும்.
இந்த நான்கு எழுத்துக்களில் ய மற்றும் வ ஆகியவை இரு உயிர் ஓசைகளின் சேர்க்கையால் உண்டாவதாகும்.
இ+அ=ய
உ+அ=வ
தமிழில் புணர்ச்சி இலக்கணம் தெரிந்தவர்கள் உடம்படுமெய் பற்றி அறிந்திருப்பீர்கள்.
நிலைமொழியில் வருமொழியிலும் உயிர் எழுத்து இருக்கும் போது, உயிர் எழுத்தும் உயிர் எழுத்தும் சேரும் போது, புணர்ச்சியில் உடம்படுமெய்யாக "ய" மற்றும் "வ" தோன்றும். அதவது ய மற்றும் வ இரண்டு உயிர் எழுத்து சேர்ந்து உருவாகும் இடையின எழுத்து என்பது தெளிவு.
மீதமுள்ள ர மற்றும் ல ஆகியவை தனி உயிரோசை கொண்டவை.
சமஸ்கிருதத்தில் இவ்விரு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் வகையில் சேர்க்கப்பட்டு உள்ளன, ஏனெனில் இவை அரை உயிர் எழுத்துக்கள் எனினும் இவை உயிர் எழுத்துக்களைப் போலவே நிலை பெற்ற ஓசையைக் கொண்டவை. இந்த எழுத்துக்களின் ஓசை மற்றும் உச்சரிப்பைக் கற்றுக் கொண்ட பிறகு இது தெளிவாக விளங்கும்.

ऋ இப்போது இந்த எழுத்தின் உச்சரிப்புக்கு வருவோம். இந்த எழுத்தின் உச்சரிப்பு 'ரு' வும் அல்ல, 'ரி' யும் அல்ல. இந்த எழுத்து 'ரு'க்கும் 'ரி'க்கும் இடப்பட்ட உச்சரிப்பு கொண்டது என்பதே உண்மை. அதாவது 'ர்' என்னும் இடையின எழுத்தின்(அரை உயிர் எழுத்தின்) அடிப்படையில் பிறந்த 'இ' க்கும் 'உ'க்கும் இடைப்பட்ட ஓசை ஆகும்.
உ என்னும் எழுத்தை உச்சரிக்க உதடுகளைக் குவிக்க வேண்டும். இ என்னும் எழுத்தை உச்சரிக்க உதடுகளைக் குவிக்காமல் உச்சரிக்க வேண்டும்.
இந்த ऋ என்னும் எழுத்தை உச்சரிப்பது உதடுகளைக் குவிக்காமல் 'உ' என்று உச்சரிப்பதைப் போன்றது. அவ்வாறு உதடுகளைக் குவிக்காமல் எழுப்பும் 'உ' என்னும் உயிரோசை 'ர்' என்னும் இடையின எழுத்தின் ஆதாரமாகப் பிறப்பதே ऋ என்னும் இவ்வெழுத்தாகும்.
ऋ = 'ர்' + 'இ' க்கும் 'உ'க்கும் இடைப்பட்ட ஓசை
    = 'ர்' + (உதடுகளைக் குவிக்காமல் உருவாக்கும் 'உ' ஓசை)
ऋ இது ஓர் உயிர் எழுத்தாகும். முன்பு நாம் சொன்னதுபோல உயிர் எழுத்துக்கள் நிலைபெற்ற ஓசை கொண்டவை. இந்த ஓசையை ऋ............................ என்று ஒலித்துக் கொண்டே இருக்க முடியும்.

ऋ வின் இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் உ என்ற ஓசையை உதட்டைக் குவிக்காமல் இவ்வாறுதான் உச்சரிப்போம்.
'ரோடு' என்பதை உச்சரித்துப் பாருங்கள்.  'டு' என்பதில் 'ட்+உ' இருந்தாலும் பேச்சு வழக்கில் நாம் 'உ'வைப் போல உதட்டைக் குவித்து உச்சரிப்பதில்லை.
உதட்டைக் குவிக்காமல் ரோடு என்றுதான் உச்சரிப்போம். இறுதியில் உள்ள அந்த 'உதட்டைக் குவிக்காத உ என்னும் ஓசை' உள்ளதல்லவா? அதே ஓசை தான் நான் சொல்வது. அந்த ஓசை 'ர்' என்பதன் அடியாகப் பிறப்பது தான் ऋ என்னும் எழுத்து.
இதேபோல்
கண்ணு,
மூக்கு
மாடு
போன்ற 'உ' ஓசையைக் கொண்ட பேச்சு வழக்குச் சொற்களை உச்சரித்துப் பாருங்கள்.
இ வுக்கும் உ வுக்கும் இடைப்பட்ட அந்த ஓசை என்னவென்று விளங்கும்.
அதுதான் இந்த எழுத்தின் சரியான உச்சரிப்பு.  சிரமம் ஒன்றும் அல்ல.
இவ்வாறு உச்சரிக்க முயற்சி செய்து சிரமப்படாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். சமஸ்கிருதத்தில் தான் இவ்வாறு சிரமப் பட்டு சரியாக உச்சரிக்க வேண்டும். சமஸ்கிருத்ததில் இருந்து வந்த  போன்ற பல இந்திய மொழிகள் இந்த எழுத்தை உபயோகிக்கின்றன, கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் ஒவ்வொரு மொழியும் அதற்கேற்ப ऋ இந்த எழுத்தின் உச்சரிப்பை 'ர' 'ரி' 'ரு' என பலவிதமாக மாற்றிக் கொண்டன. அதாவது அந்த மொழி பேசுபவர்களால் மாற்றப்பட்டுவிட்டன. மராத்தியில் இந்த எழுத்து 'ரு' என உச்சரிக்கப் படுகிறது. மற்ற மொழிகளில் பொதுவாக 'ரி' என உச்சரிக்கப் படுகிறது. சில வட இந்திய மொழிகளில் 'ர' எனவும் உச்சரிக்கப் படுகிறது.

மேலே சொல்லப்பட்ட விளக்கம் சிலருக்கு புரிந்துகொள்ள சிரமமாகத் தோன்றலாம். எந்த ஒரு ஹிந்தி புத்தகத்திலும் இந்த எழுத்திற்கு இப்படி தெளிவான விளக்கமோ சரியான உச்சரிப்போ காணக் கிடைக்கவில்லை. சில புத்தகங்களில் 'ரி' என்றும் சிலவற்றில் 'ரு' என்றும் மட்டும்தான் உள்ளது. இந்த எழுத்தைப் பற்றி எந்தவொரு விளக்கமும் எங்கும் இல்லை. எனவே தெளிவான விளக்கம் அளிக்க வேண்டியே இவ்வளவு சொல்ல வேண்டியதாயிற்று.

நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். இந்த எழுத்து ஹிந்தியில், "ரி"க்கும் "ரு"க்கும் இடைப்பட்ட ஓசை-உதட்டைக் குவிக்காமல் ஒலிக்கும் உ ஓசை கொண்டது .

இந்த எழுத்தை வேறு ஒரு விதமாகவும் எழுதலாம்.
ऋ இந்த எழுத்தும் மற்ற உயிரெழுத்துக்களைப் போலவே மெய் எழுத்துக்களோடு சேரும். மெய் எழுத்துக்களோடு இந்த எழுத்து சேரும்போது அந்த மெய் எழுத்தோடு 'ரு' சேர்த்து உச்சரிக்க வேண்டும்.(உதட்டைக் குவிக்காமல் ஒலிக்கும் ரு)
क+ऋ = कृ (க்+ரி=க்ரு)
இந்த எழுத்தின் மாத்ரா ृ ஆகும். उ மற்றும் ऊ வின் மாத்ராவைப் போல இதுவும் எழுத்தின் கீழ்ப்பகுதியில் இடப்படுகிறது.
 उ மற்றும் ऊ வின் மாத்ராவான ु ू வையும், ऋ இன் மாத்ராவான ृ இதையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள். उ மற்றும் ऊ வின் மாத்ரா கடிகாரமுள் திசையில்(Cloclwise Direction) எழுதப்படும்.  ऋ இன் மாத்ராவான ृ கடிகாரமுள் எதிர் திசையில் (Anti Clockwise Direction) எழுதப்படும்.
ऋ இன் மாத்ரா ृ எவ்வாறு எழுத வேண்டும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இப்போது ऋ இந்த எழுத்தை உபயோகித்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
ऋषि - ருஷி - முனிவர்
ऋक् - ருக் - ரிக்வேதம்
ऋत - ருத்(சமஸ்கிருதம்) - நேர்மை
ऋतु - ருது(சமஸ்கிருதம்)  - பருவகாலம்
पृथ्वी - ப்ருத்வீ - பூமி
गृह - க்ருஹ் - வீடு
कृपया - க்ருபயா - தயவு செய்து

முதல் நான்கு வார்த்தைகளின் ஆரம்பத்திலும் மற்ற வார்த்தைகளில் மாத்ரா வடிவிலும் ऋ என்னும் உயிரெழுத்தைக் காண்கிறீர்கள் அல்லவா..
முன்பு படித்த எழுத்துக்களுடன் இதையும் சேர்த்து எழுதிக்கொண்டே உச்சரித்து பயிற்சி செய்யுங்கள்.
அடுத்த பாடத்தில் காணலாம்.
எதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் Comment செய்ய்ங்கள் அல்லது ashok58627@gmail.com க்கு Email செய்யுங்கள்.
நன்றி! शुक्रिया

ஹிந்தி உயிரெழுத்துக்கள் - उ மற்றும் ऊ


இந்த ஹிந்தியின் ஐந்தாவது உயிரெழுத்தாகும். இந்த எழுத்தின் உச்சரிப்பு தமிழில் உள்ள 'உ' போன்றதாகும். இந்த எழுத்து 'உண்மை' 'உழைப்பு' என்பதில் உள்ள 'உ' போன்று உச்சரிக்கப்படுகிறது.
இதை எழுதுவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. இதை எவ்வாறு எழுதுவது என்று கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஒரு 3 போட்டு அதன் மேல் ஒரு மேற்கோடு போட வேண்டும். அவ்வளவுதான். இதை அழகாக எழுத, 3-இன் முடிவுப்பகுதியை சற்று இடப்புறம் மேல்நோக்கி இழுத்துவிட வேண்டும். 3-இன் ஆரம்பப் பகுதியும் மேற்கோடும் தனித்தனியாகத் தெரியாதவாறு மேற்கோடு போட வேண்டும். இது குழப்புவது போல இருந்தால் விட்டுவிடுங்கள், சில முறை எழுதிப் பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும்.
இப்போது சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
उल्लू  - உல்லூ - ஆந்தை
उड़ना - உட்னா - பறத்தல்
उजाला - உஜாலா - பிரகாசம்
उम्मीद - உம்மீத் - நம்பிக்கை
இந்த வார்த்தைகளின் ஆரம்பத்தில் उ உள்ளதைக் காண முடிகிறதா..
उ என்னும் எழுத்து மற்ற மெய் எழுத்துக்களோடு சேரும்போது அதனோடு 'ु' என்னும் குறியீடு சேர்க்க வேண்டும். இந்தக் குறியீடானது எழுத்தின் கீழ்ப்பகுதியில் இட வேண்டும். இதை எவ்வாறு எழுத வேண்டும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

மெய் எழுத்தை எழுதிய பிறகு அதன் கீழ்ப்பகுதியில் வலப்புறம் இருந்து இடப்புறம் கொக்கி போன்ற வடிவத்தில் இந்தக் குறியீடு போட வேண்டும்.
क + उ = क + ु =कु
म + उ = म + ु = मु
र + उ = र + ु = रु
स + उ = स + ु =सु

ஹிந்தி வார்த்தைகளைப் படிக்கும்போது ஒரு எழுத்தின் கீழ்ப்புறம் ु இந்தக் குறியீடு இருந்தால் அந்த எழுத்தோடு उ என்னும் உயிரெழுத்து சேர்ந்துள்ளது என்று அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
மேலுள்ள எழுத்துக்காட்டுகளில் மூன்றாவது எடுத்துக்காட்டைக் கவனித்தீர்களா? र என்னும் மெய் எழுத்துடன் उ என்னும் உயிர் எழுத்து சேரும்போது 'उ மாத்ரா ु' வானது எவ்வாறு இடப்பட்டுள்ளது என்பதைக் கவனித்தீர்களா? ु என்னும் குறியீடானது र இன் கீழ்ப்புறம் அல்லாமல் வலப்புறம் இடப்பட்டுள்ளது. மற்ற மெய் எழுத்துக்களைப் போல் அல்லாமல் र என்னும் மெய் எழுத்து மட்டும் விதி விலக்காகும். र என்னும் மெய் எழுத்துடன் उ மற்றும் ऊ என்னும் உயிரெழுத்துக்கள் சேரும்போது மட்டும் இயல்பாக அல்லாமல் உயிரெழுத்தின் மாத்ரா-வானது வலப்புறம் இடவேண்டும்.  र இந்த மெய் எழுத்து தமிழின் 'ர' க்கு இணையானதாகும்.
இப்போது उ வின் மாத்ராவை உபயோகித்து சில வார்த்தைகளைக் காண்போம்.
दुकान
जुबान
गुलाब
இந்த வார்த்தைகளில் उ வை அடையாளம் காண முடிகிறதா.. முதல் எழுத்தின் கீழே उ வின் மாத்ராவும் இரண்டாவது எழுத்தின் கீழே आ வின் மாத்ரா உள்ளதைக் கவனித்தீர்களா. நீங்கள் முன்பே படித்த எழுத்துக்கள் எங்கேயாவது தென்பட்டால் அதையும் கண்டு நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.


இது அடுத்த உயிரெழுத்தாகும். இதை उ வின் நெடில் என்று சொல்லலாம். இந்த எழுத்தின் உச்சரிப்பு தமிழில் உள்ள 'ஊ' வை போன்றது. அதாவது 'ஊர்' 'ஊசி' என்பதில் உள்ள 'ஊ' வைப்போல உச்சரிக்கப்படுகிறது.
இதனை எழுதுவது எப்படி என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

முதலில் उ எழுதி அதன் மையத்தில் இருந்து வலப்புறம் ஒரு வளைவு போட வேண்டும்.
ऊ வானது மெய் எழுத்துக்களோடு சேரும்போது மெய் எழுத்தின் கீழ்ப்புறம் ऊ மாத்ரா - ू இட வேண்டும்.
 क + ऊ = क + ू =कू
म + ऊ = म + ू = मू
र + ऊ= र + ू = रू
स + ऊ = स + ू =सू

 उ மாத்ராவுக்கும் ऊ மாத்ராவுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு கொள்ளுங்கள். उ மாத்ராவானது வலப்புறம் இருந்து இடப்புறம் போடப்படும், வளைவின் மேல்ப்பகுதி திறந்திருக்கும்.ऊ மாத்ராவானது இடப்புறம் இருந்து வலப்புறம் போடப்படும், இதில் வளைவின் கீழ்ப்பகுதி திறந்திருக்கும். இரண்டு மாத்ராவுமே கடிகார முள் திசையில்தான் (Clockwise Direction) எழுதப்படும். ऊ மாத்ரா எவ்வாறு எழுத வேண்டும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது. उ மற்றும் ऊ வின் மாத்ரா 'ु, ू' எழுதும் போது சுழி போட்டு ஆரம்பித்தும் எழுதலாம், கொக்கிபோல போட்டும் எழுதலாம். போதுவாக அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களில் கொக்கிபோல மாத்ரா இருக்கும், எழுதப்பட்ட எழுத்துக்களில் சுழி போட்டு எழுதப்பட்டிருக்கும். கொக்கி போல போட்டு எழுதினாலும் தவறு ஒன்றுமல்ல, சொல்லப்போனால் அதுதான் அழகாக இருக்கும்.
முன்பே சொன்னதுபோல र என்னும் மெய் எழுத்துடன் ऊ மாத்ரா சேரும்போது வழக்கம்போல் அல்லாமல் ऊ மாத்ரா வலப்புறம் இடப்படும்.
र என்னும் மெய் எழுத்துடன் उ மற்றும் ऊ சேரும்போது எவ்வாறு வேறுபடும் என்பதை மட்டும் கவனித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது ஒன்றும் கடினமல்ல. தமிழில் 'உ', 'ஊ' என்னும் உயிரெழுத்துக்கள் மெய் எழுத்துக்களோடு சேரும்போது அதன் மாத்ராவானது பல வடிவங்களில் மாறும். ஒவ்வொரு மெய் எழுத்துக்கும் வேறு வேறு குறியீடு உபயோகிக்கப் படும். உதாரணமாக கு, ஙு, சு, ஞு, டு, ணு, து, நு,.. மற்றும் கூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ,..
ஆனால் ஹிந்தியில் र என்னும் ஒரு மெய் எழுத்து மட்டும் उ மற்றும் ऊ வோடு சேரும் போது சற்று வேறுபடும். மற்ற அனைத்து மெய் எழுத்துக்களுக்கும் இயல்பான முறையிலேயே மெய் எழுத்துக்களோடு உயிரெழுத்தின் குறியீடு சேர்க்கப்படும்.  மற்ற அனைத்து உயிரெழுத்துக்களும் இதே போல ஒரே மாதிரிதான் குறியீடுகள் அமையும்.
இப்போது ऊ மற்றும் அதன் மாத்ராவை வைத்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
ऊदा - ஊதா - ஊதா
ऊपर - ஊபர் - மேலே
ऊँट - ஊண்ட் - ஒட்டகம்
जूता - ஜூதா - காலணி
फूल - ஃபூல் - பூ
रूई - ரூஈ - நூல்

மேலே உள்ள வார்த்தைகளில் ऊ மற்றும் அதன் மாத்ராவை அடையாளம் கண்டுகொண்டு விட்டீர்கள் அல்லவா.. முதல் மூன்று வார்த்தைகளின் ஆரம்பத்தில் ऊ உள்ளது. மற்ற வார்த்தைகளில் ऊ வின் மாத்ரா உள்ளது.
ऊँट என்னும் வார்த்தையின் மேலே இருக்கும் வளைவு மற்றும் புள்ளி ' சந்த்ரபிந்து' என்று சொல்லப்படும். இதனை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் பார்ப்போம்.

செவ்வாய், 17 நவம்பர், 2015

ஹிந்தி உயிரெழுத்துக்கள் - इ மற்றும் ई

இது ஹிந்தியில் மூன்றாவது உயிர் எழுத்து ஆகும். இதை தமிழில் உள்ள 'இ' போன்றே உச்சரிக்க வேண்டும்.
இதை எழுதுவதும் மிக எளிது. இதை எவ்வாறு எழுத வேண்டும் என்பது கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 


மேலிருந்து சிறிதாக ஒரு கோடு போட்டு அதிலிருந்த்து 'ஆங்கிலத்தின் S' போல போட்டு, இறுதியில் சுழித்து விட வேண்டும்.
மேலிருந்து போடும் கோடு சிறு கோடு மையத்தில் போடாமல் வலப்புறமிருந்து போட்டால் इ அழகாக இருக்கும்.
இப்போது इ -ஐ உபயோகித்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
आइना -ஆஇனா - முகம் பார்க்கும் கண்ணாடி
மேலே உள்ள ஹிந்தி வார்த்தையில் इ என்னும் எழுத்தை உங்களால் அடையாளம் காண முடிகிறதா. நல்லது... இந்த வார்த்தையில் इ என்னும் உயிரெழுத்து வார்த்தையின் நடுவில் வந்திருப்பதைக் கவனித்தீர்களா? நான் முன்பே சொன்னது போல தமிழ் உயிரெழுத்துக்களைப் போல் அல்லாமல் ஹிந்தி உயிரழுத்துக்கள் வார்த்தைகளின் நடுவிலும் இறுதியிலும் வரும். இங்கு इ என்னும் உயிரெழுத்து வர்த்தையின் நடுவில் இடம்பெற்றுள்ளது.

इमली - இம்லீ - புளி
इमारत - இமாரத் - கட்டிடம்
இந்த வார்த்தைகளின் ஆரம்பத்தில் इ இருப்பது தெரிகிறதல்லவா..

इ என்னும் உயிரெழுத்து மற்ற மெய் எழுத்துக்களோடு சேரும்போது ि என்னும் மாத்ரா, அதாவது குறியீடு சேர்க்க வேண்டும். இந்தக் குறியீடு சேர்க்கும்போது முக்கியம், இதனை மெய் எழுத்தின் முற்பகுதியில் அதாவது இடதுபுறம்தான் சேர்க்க வேண்டும்.
क+इ= क +ि =कि
म+इ= म + ि=मि
र+इ= र + ि=रि
स+इ= स + ि=सि
இந்த इ மாத்ரா ि வை எவ்வாறு எழுதுவது என்பது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

உயிர்மெய் எழுத்தில் 'इ மாத்ரா- ि' வரும் சில வார்த்தைகளைப் பார்ப்போம்
किताब - கிதாப் - புத்தகம்.
மேற்கண்ட வார்த்தையின் ஆரம்பத்தில் 'इ மாத்ரா- ि' - வை அடையாளம் காண முடிகிறதல்லவா. முன்பு கூறியது போலவே, क என்னும் மெய் எழுத்தின் இடது புறம் 'इ மாத்ரா- ि' இடப்பட்டுள்ளதல்லவா. ஒரு மெய் எழுத்தின் இடப்புறம் ि என்ற குறியீடு இருந்தால் அதனோடு इ என்னும் உயிரெழுத்து சேர்ந்துள்ளது என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
नारियल - நாரியல் - தேங்காய்
मंदिर - மந்திர் - கோயில்
मिनट - மினட் - நிமிடம்


ஹிந்தியின் அடுத்த உயிரெழுத்து ई ஆகும். இதன் உச்சரிப்பு தமிழில் உள்ள 'ஈ' போன்றதே ஆகும்.
இதனை எழுதுவதும் மிக எளிதானதே. इ இன் மேலே வலப்புறம் ஒரு கொக்கி போல போட்டால் அது ई ஆகிவிடும். நினைவிருக்கட்டும். ई-இல் கொக்கி போல போட்ட பிறகுதான் மேல்கோடு போட வேண்டும். பொதுவாக ஹிந்தியில் எல்லா எழுத்திலும், எழுத்தின் மற்ற பாகங்களை எழுதிய பிறகு இறுதியில்தான் மேற்கோடு போடப்படும். வார்த்தைகள், வாக்கியங்கள் எழுதும் போது, ஒவ்வொரு வார்த்தையும் எழுதி முடிந்த பிறகு அந்த வார்த்தைக்கு மொத்தமாக மேற்கோடு போடப்பட வேண்டும். ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியாக மேற்கோடு போடக்கூடாது.
இந்தக் கோடு ஒவ்வொரு எழுத்தையும் மற்ற எழுத்துக்களுடன் இணைப்பதற்கே போடப்படுகிறது.
ई - ஐ எவ்வாறு எழுத வேண்டும் என்பது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.


நன்றாக எழுதும் வரை சில முறை எழுதிப் பாருங்கள்.
இப்போது ई என்னும் எழுத்தை உபயோகித்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
ईख- ஈக் - கரும்பு
ईंट - ஈண்ட் - செங்கல்
ईद - ஈத் - ஈத் பண்டிகை(பக்ரீத்)
मिटाई - மிடாஈ/ மிடாயீ - மிட்டாய்
ई ஆனது மற்ற மெய் எழுத்துக்களுடன் சேரும் போது அதனோடு 'ी' என்ற குறியீடு சேர்க்க வேண்டும். இந்தக் குறியீடானது மெய் எழுத்தின் வலது புறம் சேர்க்க வேண்டும்.
உயிர்மெய் எழுத்தில் 'ई மாத்ரா - ी' எவ்வாறு எழுத வேண்டும் என்பது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

உயிர்மெய் எழுத்தில் 'ई மாத்ரா - ी' உள்ளவாறு சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
पानी - பானீ - தண்ணீர்
चाबी - சாபீ - சாவி
कंघी - கந்தீ - சீப்பு
दादी - தாதீ - பாட்டி
மேற்கண்ட வார்த்தைகளின் இறுதியில் உள்ள ई - ஐ அதாவது ई மாத்ரா - ी வை உங்களால் அடையாளம் காண முடிகிறதல்லவா!
அடுத்த எழுத்துக்களை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்

சனி, 14 நவம்பர், 2015

ஹிந்தி உயிரெழுத்துக்கள்- अ மற்றும் आ

ஹிந்தி உயிர் எழுத்துக்கள்- अ மற்றும் आ

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

என்று வள்ளுவன் சொன்னது போல அகரம் தான் எல்லா மொழிகளுக்கும் முதல் எழுத்து.

இது ஹிந்தி எழுத்தின் அதாவது தேவனாகரி எழுத்தின் முதல் எழுத்தாகும்.
இதை உச்சரிப்பது மிகவும் எளிது. இதை தமிழில் உள்ள "அ" வைப்போலவே உச்சரிக்க வேண்டும். இதை எழுதுவதும் மிகவும் எளிதானது தான்.
தமிழில் உயிர் எழுத்துக்கள் வார்த்தையின் ஆரம்பத்தில் மட்டும் தான் வரும், ஆனால் ஹிந்தியில் அப்படியல்லாமல், சில உயிரெழுத்துக்கள் வார்த்தையின் நடுவிலும் இறுதியிலும் வரலாம்.

ஓரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் முதலில் அந்த மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மொழியைப் படிக்கக் கற்றுக் கொண்டு விட்டால் அந்த மொழியின் சொற்களைக் கற்பதும் இலக்கணத்தைக் கற்பதும் எளிதாகிவிடும். சொற்களையும் இலக்கணத்தையும் கற்று விட்டால் அந்த மொழியைப் பேசுவது எளிதாகிவிடும்.
இலக்கணத்தையும் சொற்களையும் கற்றுக்கொண்டு, அந்த மொழி பேசுபவர்களைக் உற்று நோக்கினாலே மொழியை எளிமையாகக் கற்றுவிடலாம்.
ஒரு மொழியை எழுதப் படிக்காமல் அந்த மொழியை கற்றல் என்பது முழுமையாகாது.
எனவே ஒரு மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பதே சிறந்தது.
எழுத்துக்களை எழுதுவது என்பது ஒரு கலை என்றே சொல்லலாம். எழுத்துக்களை அழகாக எழுதுவதற்கும் ஒவியக்கலைக்கும் வித்தியாசம் இல்லை என்றே சொல்லலாம்.
ஒவ்வொரு எழுத்துக்களையும் படிக்கும் போதே அந்த எழுத்துக்களை அழகாக நல்ல முறையில் நல்ல வடிவத்தில் எழுதிப் பழகுங்கள்.
ஹிந்தி வார்த்தைகளை பார்க்கும் போது நீங்கள் படித்த எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறதா எனப் பாருங்கள். உங்களால் ஒரு எழுத்தையும் அதன் உச்சரிப்பையும் அடையாளம் காண முடிகிறது எனில் அந்த எழுத்தை நீங்கள் படித்து விட்டீர்கள்.
अ-வை எப்படி எழுதுவது என்பது கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


மிகவும் எளிதாக உள்ளது அல்லவா!
3 போட்டு அதன் கீழே கொஞ்சம் நீளமாக இழுத்துவிட்டு, நடுவில் இருந்து வலப்புறம் ஒரு கோடு போட்டு, மேலிருந்து கீழே ஒரு கோடு போட்டு, பிறகு மேற்கோடு போட வேண்டும்.

3 என்று நான் சொன்னதால் 3-ஐப் போலவே போடாதீர்கள். உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டி 3 என்று சொன்னேன். ஆனால் अ போடுவதற்கு 3 போல போடக்கூடாது. 3-ல் கீழ் பாகம் மேல் பாகத்தைவிட சற்று பெரிதாக இருக்குமாறு போட வேண்டும், கீழே கோட்டை இடது புறம் வரை இடுத்து விட்டு எழுதினால் தான் அழகாக இருக்கும். மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்கும் போது உங்களுக்கே இது தெரிந்துவிடும். இப்போது நான் சொல்லிவிட்டபடியால் மீண்டும் மீண்டும் எழுதாமலேயே உங்களால் अ-வை அழகாக எழுத முடியும்.
 இதைப் பார்ப்பதோடு நிறுத்திவிடாமல் ஒரு காகிதம் மற்றும் பேனா எடுத்து
अ-வை சில முறை எழுதிப் பாருங்கள். அழகாக சரியாக எழுதும் வரை நான்கைந்து முறை எழுதிப் பாருங்கள்.

தமிழைப் போலவே ஹிந்தியிலும் अ-வானது மற்ற மெய் எழுத்துக்களோடு சேரும் போது அந்த மெய் எழுத்துக்களின் வடிவம் மாறாது. அதாவது अ-வுக்கு உயிர்மெய் எழுத்தில் மாத்ரா கிடையாது.
மாத்ரா என்பது தமிழில் மெய் எழுத்துக்களை, உயிர்மெய் எழுத்துக்களாக மாற்ற அதனோடு சேர்க்கப்படும் "ா, ிீுூ" போன்ற குறியீடுகளாகும்.
அதாவது 'கா, சா, டா, தா,..' வில் 'ஆ' ஒலி கொடுப்பதற்கு 'ா' சேர்க்கப்ப்டுகிறது ஆனால், 'க, ச, ட, த,....' போன்றவற்றில் 'அ' விற்கு எந்த குறியீடும் சேர்க்கப்படவில்லை அல்லவா. அதே போல தான் ஹிந்தியிலும்.
தமிழைப் போல் அல்லாமல் ஹிந்தியில் எல்லா மெய் எழுத்துக்களுடனும் 'அ' மாத்ரா சேர்ந்தே இருக்கும். அதாவது தமிழில் மெய் எழுத்துக்கள் 'க்,ங்,ச்,ஞ்,.....'
என்று இருக்கும், ஆனல் ஹிந்தியில் மெய் எழுத்துக்கள் 'க,ங,ச,ஞ,.....' என்று இருக்கும். மெய் எழுத்துக்களை படிக்கும் போது இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இப்போது अ-வை வைத்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

अखबार - அக்பார்- செய்தித்தாள்
अग्नि - அக்னி - நெருப்பு
अनार - அனார்- மாதுளை
अजनबी - அஜ்னபீ - முன்பின் தெரியாதவர்
अतिथि- அதிதி - விருந்தாளி
अधिकार - அதிகார் - அதிகாரம்
अद्भुत - அற்புத் - அற்புதம்
अनीति - அனீதி - அனீதி
अनुभव - அனுபவ் - அனுபவம்
अस्पताल - அஸ்பதால் - ஹாஸ்பிடல்

மேலே உள்ள வார்த்தைகளைப் பாருங்கள். ஹிந்தி வார்த்தை- தமிழ் உச்சரிப்பு- தமிழ் அர்த்தம் என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது ஹிந்தி எழுத்தில் உள்ள வார்த்தைகளை உங்களால் உச்சரிக்க முடியவில்லையென அதிருப்தி அடைய வேண்டாம்.
ஹிந்தி எழுத்துக்களைப் படித்து முடித்த பிறகு எளிமையாக உங்களால் ஹிந்தி வார்த்தைகளை உச்சரிக்க முடியும். இப்போது மேலே உள்ள வார்த்தைகளில் முதலில் உள்ள अ-அ- வை உங்களால் அடையாளம் காண முடிகிறதா என்று மட்டும் பாருங்கள்.
கடைசியாக உள்ள 5 வார்த்தைகளை கவனித்தீர்களா.
அஸ்பதால்-ஹாஸ்பிடல்
அனுபவ்- அனுபவம்
அனீதி - அனீதி
அதிகார்- அதிகாரம்
அற்புத் - அற்புதம்
தமிழ் வார்த்தைக்கும் ஹிந்தி வார்த்தைக்கும் அதிக வேற்றுமை இல்லை என்பது புரிகிறது அல்லவா! உண்மைதான்.
சமஸ்கிருதத்தில் இருந்து தான் பெரும்பான்மையான ஹிந்தி சொற்கள் பெறப்பட்டன, அதே போல தமிழிலும் பல வார்த்தைகள், நாம் நாள்தோறும் உபயோகிக்கும் வார்த்தைகள் சமஸ்கிருத்தில் இருந்து பெறப்பட்டவையே.
எனவே தமிழ் பேசுபவர்களுக்கு ஹிந்தியைப் புரிந்து கொள்வதும் ஹிந்தி கற்பதும் கடினமான் விசயமே அல்ல. சற்று கவனமாக உற்று நோக்கினால் போதும், ஹிந்தி கற்பது எவ்வளவு எளிமை என்பது புரியும்.
இப்பொழுது ஹிந்தியில் அடுத்த உயிரெழுத்துக்குச் செல்வோம்.

இது ஹிந்தியில் இரண்டாவது உயிரெழுத்து ஆகும். இதை தமிழில் உள்ள ஆ- வைப் போல உச்சரிக்க வேண்டும்.
இதை எழுதும் முறையும் மிக எளிது. अ எழுதுவது போலவே, ஆனால் இரண்டு செங்குத்து கோடுகள் போட வேண்டும்.
கீழே உள்ள படத்தைப் பார்த்து எவ்வாறு எழுத வேண்டும் என்பதை எழுதிப் பழகுங்கள்.

இப்போது आ-வை உபயோகித்து சில வார்த்தைகளைப்பார்ப்போம்.

आम - ஆம் - மாம்பழம்
आइना - ஆஇனா/ஆயினா - முகம் பார்க்கும் கண்ணாடி
आलू - ஆலூ - உருளைக்கிழங்கு
आज - ஆஜ் - இன்று
आसमान - ஆஸ்மான் - வானம்
மேற்கண்ட வார்த்தைகளின் ஆரம்பத்தில் உள்ள आ -வை உங்களால் அடையாளம் காண முடிகிறது அல்லவா!



உயிரெழுத்து आ -வானது மற்ற மெய் எழுத்துக்களோடு சேரும் போது आ- விற்கு "ा" என்ற குறியீடு இட வேண்டும் அதாவது மெய் எழுத்தின் வலப்புறம் ஒரு செங்குத்துக் கோடு இட வேண்டும்.
எடுத்துக்காட்டாக क - என்னும் மெய் எழுத்தில் आ சேர்க்க, அதனோரு आ மாத்ரா இட வேண்டும், அதாவது ा என்னும் குறியீடு இட வேண்டும், 
क+आ = क +ा  =का
म+आ= म + ा =मा
र+आ= र +ा =रा
स+आ=स + ा=सा
இந்தக் குறியீடானது தமிழில் போடப்படும் 'துணைக்கால்- ா' போன்றது.
आ-வானது மற்ற மெய் எழுத்துக்களுடன் சேரும்போது, உயிர்மெய் எழுத்துக்களில் आ மாத்ரா ा, எவ்வாறு எழுதப்படுகிறது என்பது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.



உயிரெழுத்துக்களின் குறியீடுகள் போட்ட பிறகே மேல்கோடு போட வேண்டும்.
அதே சமயம் வார்த்தைகள் எழுதும் போது ஒவ்வொரு எழுத்தையும் மேல்கோடின்றி எழுதிவிட்டு வார்த்தை முடிந்த பிறகே மேல்கோடு போட வேண்டும்.

உயிர்மெய் எழுத்துக்களின் आ உபயோகித்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
कमरा - கம்ரா - அறை
மேலே உள்ள ஹிந்தி வார்த்தையின் இறுதியில் உள்ள आ-ஆ-வை அடையாளம் காண முடிகிறதா.. இறுதியில் செங்குத்துக் கோடு தெரிகிறது அல்லவா, அதுதான் आ. மற்ற மெய் எழுத்துக்களின் வலப்புறம் ஒரு செங்குத்துக் கோடு இருந்தால் அது आ-ஆ என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள். மேலுள்ள வார்த்தையில் மற்ற எழுத்துக்களைப் பற்றி இப்போது கவலை வேண்டாம். பின்வரும் சில வார்த்தைகளைக் கவனித்து, அவற்றில் आ-ஆ-வை அடையாளம் காணுங்கள்.
किताब - கிதாப் - புத்தகம்
இந்த வார்த்தையில், இரண்டாவது எழுத்தில் வலப்புறம்  आ -வை அடையாளம் காண முடிகிறதா..
तकिया - தகியா - தலையணை
இந்த வார்த்தையின் இறுதியில் आ-வைக் காண முடிகிறதல்லவா..

மற்ற உயிர் எழுத்துக்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
எதேனும் சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் நண்பர்களே!