சனி, 14 நவம்பர், 2015

ஹிந்தி உயிரெழுத்துக்கள்- अ மற்றும் आ

ஹிந்தி உயிர் எழுத்துக்கள்- अ மற்றும் आ

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

என்று வள்ளுவன் சொன்னது போல அகரம் தான் எல்லா மொழிகளுக்கும் முதல் எழுத்து.

இது ஹிந்தி எழுத்தின் அதாவது தேவனாகரி எழுத்தின் முதல் எழுத்தாகும்.
இதை உச்சரிப்பது மிகவும் எளிது. இதை தமிழில் உள்ள "அ" வைப்போலவே உச்சரிக்க வேண்டும். இதை எழுதுவதும் மிகவும் எளிதானது தான்.
தமிழில் உயிர் எழுத்துக்கள் வார்த்தையின் ஆரம்பத்தில் மட்டும் தான் வரும், ஆனால் ஹிந்தியில் அப்படியல்லாமல், சில உயிரெழுத்துக்கள் வார்த்தையின் நடுவிலும் இறுதியிலும் வரலாம்.

ஓரு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் முதலில் அந்த மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
மொழியைப் படிக்கக் கற்றுக் கொண்டு விட்டால் அந்த மொழியின் சொற்களைக் கற்பதும் இலக்கணத்தைக் கற்பதும் எளிதாகிவிடும். சொற்களையும் இலக்கணத்தையும் கற்று விட்டால் அந்த மொழியைப் பேசுவது எளிதாகிவிடும்.
இலக்கணத்தையும் சொற்களையும் கற்றுக்கொண்டு, அந்த மொழி பேசுபவர்களைக் உற்று நோக்கினாலே மொழியை எளிமையாகக் கற்றுவிடலாம்.
ஒரு மொழியை எழுதப் படிக்காமல் அந்த மொழியை கற்றல் என்பது முழுமையாகாது.
எனவே ஒரு மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பதே சிறந்தது.
எழுத்துக்களை எழுதுவது என்பது ஒரு கலை என்றே சொல்லலாம். எழுத்துக்களை அழகாக எழுதுவதற்கும் ஒவியக்கலைக்கும் வித்தியாசம் இல்லை என்றே சொல்லலாம்.
ஒவ்வொரு எழுத்துக்களையும் படிக்கும் போதே அந்த எழுத்துக்களை அழகாக நல்ல முறையில் நல்ல வடிவத்தில் எழுதிப் பழகுங்கள்.
ஹிந்தி வார்த்தைகளை பார்க்கும் போது நீங்கள் படித்த எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறதா எனப் பாருங்கள். உங்களால் ஒரு எழுத்தையும் அதன் உச்சரிப்பையும் அடையாளம் காண முடிகிறது எனில் அந்த எழுத்தை நீங்கள் படித்து விட்டீர்கள்.
अ-வை எப்படி எழுதுவது என்பது கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


மிகவும் எளிதாக உள்ளது அல்லவா!
3 போட்டு அதன் கீழே கொஞ்சம் நீளமாக இழுத்துவிட்டு, நடுவில் இருந்து வலப்புறம் ஒரு கோடு போட்டு, மேலிருந்து கீழே ஒரு கோடு போட்டு, பிறகு மேற்கோடு போட வேண்டும்.

3 என்று நான் சொன்னதால் 3-ஐப் போலவே போடாதீர்கள். உங்களுக்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டி 3 என்று சொன்னேன். ஆனால் अ போடுவதற்கு 3 போல போடக்கூடாது. 3-ல் கீழ் பாகம் மேல் பாகத்தைவிட சற்று பெரிதாக இருக்குமாறு போட வேண்டும், கீழே கோட்டை இடது புறம் வரை இடுத்து விட்டு எழுதினால் தான் அழகாக இருக்கும். மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்கும் போது உங்களுக்கே இது தெரிந்துவிடும். இப்போது நான் சொல்லிவிட்டபடியால் மீண்டும் மீண்டும் எழுதாமலேயே உங்களால் अ-வை அழகாக எழுத முடியும்.
 இதைப் பார்ப்பதோடு நிறுத்திவிடாமல் ஒரு காகிதம் மற்றும் பேனா எடுத்து
अ-வை சில முறை எழுதிப் பாருங்கள். அழகாக சரியாக எழுதும் வரை நான்கைந்து முறை எழுதிப் பாருங்கள்.

தமிழைப் போலவே ஹிந்தியிலும் अ-வானது மற்ற மெய் எழுத்துக்களோடு சேரும் போது அந்த மெய் எழுத்துக்களின் வடிவம் மாறாது. அதாவது अ-வுக்கு உயிர்மெய் எழுத்தில் மாத்ரா கிடையாது.
மாத்ரா என்பது தமிழில் மெய் எழுத்துக்களை, உயிர்மெய் எழுத்துக்களாக மாற்ற அதனோடு சேர்க்கப்படும் "ா, ிீுூ" போன்ற குறியீடுகளாகும்.
அதாவது 'கா, சா, டா, தா,..' வில் 'ஆ' ஒலி கொடுப்பதற்கு 'ா' சேர்க்கப்ப்டுகிறது ஆனால், 'க, ச, ட, த,....' போன்றவற்றில் 'அ' விற்கு எந்த குறியீடும் சேர்க்கப்படவில்லை அல்லவா. அதே போல தான் ஹிந்தியிலும்.
தமிழைப் போல் அல்லாமல் ஹிந்தியில் எல்லா மெய் எழுத்துக்களுடனும் 'அ' மாத்ரா சேர்ந்தே இருக்கும். அதாவது தமிழில் மெய் எழுத்துக்கள் 'க்,ங்,ச்,ஞ்,.....'
என்று இருக்கும், ஆனல் ஹிந்தியில் மெய் எழுத்துக்கள் 'க,ங,ச,ஞ,.....' என்று இருக்கும். மெய் எழுத்துக்களை படிக்கும் போது இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இப்போது अ-வை வைத்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.

अखबार - அக்பார்- செய்தித்தாள்
अग्नि - அக்னி - நெருப்பு
अनार - அனார்- மாதுளை
अजनबी - அஜ்னபீ - முன்பின் தெரியாதவர்
अतिथि- அதிதி - விருந்தாளி
अधिकार - அதிகார் - அதிகாரம்
अद्भुत - அற்புத் - அற்புதம்
अनीति - அனீதி - அனீதி
अनुभव - அனுபவ் - அனுபவம்
अस्पताल - அஸ்பதால் - ஹாஸ்பிடல்

மேலே உள்ள வார்த்தைகளைப் பாருங்கள். ஹிந்தி வார்த்தை- தமிழ் உச்சரிப்பு- தமிழ் அர்த்தம் என்ற வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது ஹிந்தி எழுத்தில் உள்ள வார்த்தைகளை உங்களால் உச்சரிக்க முடியவில்லையென அதிருப்தி அடைய வேண்டாம்.
ஹிந்தி எழுத்துக்களைப் படித்து முடித்த பிறகு எளிமையாக உங்களால் ஹிந்தி வார்த்தைகளை உச்சரிக்க முடியும். இப்போது மேலே உள்ள வார்த்தைகளில் முதலில் உள்ள अ-அ- வை உங்களால் அடையாளம் காண முடிகிறதா என்று மட்டும் பாருங்கள்.
கடைசியாக உள்ள 5 வார்த்தைகளை கவனித்தீர்களா.
அஸ்பதால்-ஹாஸ்பிடல்
அனுபவ்- அனுபவம்
அனீதி - அனீதி
அதிகார்- அதிகாரம்
அற்புத் - அற்புதம்
தமிழ் வார்த்தைக்கும் ஹிந்தி வார்த்தைக்கும் அதிக வேற்றுமை இல்லை என்பது புரிகிறது அல்லவா! உண்மைதான்.
சமஸ்கிருதத்தில் இருந்து தான் பெரும்பான்மையான ஹிந்தி சொற்கள் பெறப்பட்டன, அதே போல தமிழிலும் பல வார்த்தைகள், நாம் நாள்தோறும் உபயோகிக்கும் வார்த்தைகள் சமஸ்கிருத்தில் இருந்து பெறப்பட்டவையே.
எனவே தமிழ் பேசுபவர்களுக்கு ஹிந்தியைப் புரிந்து கொள்வதும் ஹிந்தி கற்பதும் கடினமான் விசயமே அல்ல. சற்று கவனமாக உற்று நோக்கினால் போதும், ஹிந்தி கற்பது எவ்வளவு எளிமை என்பது புரியும்.
இப்பொழுது ஹிந்தியில் அடுத்த உயிரெழுத்துக்குச் செல்வோம்.

இது ஹிந்தியில் இரண்டாவது உயிரெழுத்து ஆகும். இதை தமிழில் உள்ள ஆ- வைப் போல உச்சரிக்க வேண்டும்.
இதை எழுதும் முறையும் மிக எளிது. अ எழுதுவது போலவே, ஆனால் இரண்டு செங்குத்து கோடுகள் போட வேண்டும்.
கீழே உள்ள படத்தைப் பார்த்து எவ்வாறு எழுத வேண்டும் என்பதை எழுதிப் பழகுங்கள்.

இப்போது आ-வை உபயோகித்து சில வார்த்தைகளைப்பார்ப்போம்.

आम - ஆம் - மாம்பழம்
आइना - ஆஇனா/ஆயினா - முகம் பார்க்கும் கண்ணாடி
आलू - ஆலூ - உருளைக்கிழங்கு
आज - ஆஜ் - இன்று
आसमान - ஆஸ்மான் - வானம்
மேற்கண்ட வார்த்தைகளின் ஆரம்பத்தில் உள்ள आ -வை உங்களால் அடையாளம் காண முடிகிறது அல்லவா!



உயிரெழுத்து आ -வானது மற்ற மெய் எழுத்துக்களோடு சேரும் போது आ- விற்கு "ा" என்ற குறியீடு இட வேண்டும் அதாவது மெய் எழுத்தின் வலப்புறம் ஒரு செங்குத்துக் கோடு இட வேண்டும்.
எடுத்துக்காட்டாக क - என்னும் மெய் எழுத்தில் आ சேர்க்க, அதனோரு आ மாத்ரா இட வேண்டும், அதாவது ा என்னும் குறியீடு இட வேண்டும், 
क+आ = क +ा  =का
म+आ= म + ा =मा
र+आ= र +ा =रा
स+आ=स + ा=सा
இந்தக் குறியீடானது தமிழில் போடப்படும் 'துணைக்கால்- ா' போன்றது.
आ-வானது மற்ற மெய் எழுத்துக்களுடன் சேரும்போது, உயிர்மெய் எழுத்துக்களில் आ மாத்ரா ा, எவ்வாறு எழுதப்படுகிறது என்பது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.



உயிரெழுத்துக்களின் குறியீடுகள் போட்ட பிறகே மேல்கோடு போட வேண்டும்.
அதே சமயம் வார்த்தைகள் எழுதும் போது ஒவ்வொரு எழுத்தையும் மேல்கோடின்றி எழுதிவிட்டு வார்த்தை முடிந்த பிறகே மேல்கோடு போட வேண்டும்.

உயிர்மெய் எழுத்துக்களின் आ உபயோகித்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
कमरा - கம்ரா - அறை
மேலே உள்ள ஹிந்தி வார்த்தையின் இறுதியில் உள்ள आ-ஆ-வை அடையாளம் காண முடிகிறதா.. இறுதியில் செங்குத்துக் கோடு தெரிகிறது அல்லவா, அதுதான் आ. மற்ற மெய் எழுத்துக்களின் வலப்புறம் ஒரு செங்குத்துக் கோடு இருந்தால் அது आ-ஆ என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள். மேலுள்ள வார்த்தையில் மற்ற எழுத்துக்களைப் பற்றி இப்போது கவலை வேண்டாம். பின்வரும் சில வார்த்தைகளைக் கவனித்து, அவற்றில் आ-ஆ-வை அடையாளம் காணுங்கள்.
किताब - கிதாப் - புத்தகம்
இந்த வார்த்தையில், இரண்டாவது எழுத்தில் வலப்புறம்  आ -வை அடையாளம் காண முடிகிறதா..
तकिया - தகியா - தலையணை
இந்த வார்த்தையின் இறுதியில் आ-வைக் காண முடிகிறதல்லவா..

மற்ற உயிர் எழுத்துக்களை அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
எதேனும் சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் நண்பர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக