வெள்ளி, 20 நவம்பர், 2015

ஹிந்தி உயிரெழுத்து - ऋ


இது ஹிந்தியில் ஏழாவது உயிரெழுத்து ஆகும்.
தமிழில் இதற்கு இணையாக உயிரெழுத்து இல்லை.  இது ஒரு சமஸ்கிருத உயிரெழுத்து ஆகும், இது சமஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்டது. சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சொற்களில் மட்டும்தான் இந்த எழுத்தைக் காண முடியும். பொதுவாக இந்த எழுத்தைக் கொண்ட சொற்களை அதிகமாகக் காண முடியாது. எனினும் இந்த எழுத்தின் உச்சரிப்பையும் முழுமையாக கற்பது அவசியமல்லவா..
இந்த எழுத்து 'ரு' அல்லது 'ரி' என்பது போல உச்சரிக்கப்படுகிறது.இந்த எழுத்தின் உச்சரிப்பைக் கற்பது தமிழர்களுக்கு சற்று சிரமமாகத் தோனலாம். உண்மையைச் சொன்னால் இந்த எழுத்தின் சரியான உச்சரிப்பைக் கற்பது சற்று கடினமே. தாய்மொழியாக ஹிந்தி பேசுபவர்களே இந்த எழுத்தைச் சரியாக உச்சரிப்பதில்லை. குஜராத்தி மொழியில் இதனை ரு என்றும் மராத்தி மொழியில் ரி என்றும் ஹிந்தி சமஸ்கிருதத்தில் சில இடங்களில் ரு என்றும் சிலர் ரி என்றும் தவறாக உச்சரிக்கின்றனர்.

இந்த எழுத்தின் உச்சரிப்பில் பலவிதமான குழப்பங்கள் வேறு உள்ளன. தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் இதைப் பார்த்தவுடன் 'ரு' அல்லது 'ரி' என்பது உயிர்மெய் எழுத்தாயிற்றே, இதைப் போன்ற ஓசை கொண்ட எழுத்தை உயிரெழுத்தில் எதற்கு வைத்துள்ளனர் என முதல் குழப்பம் வரலாம். பிறகு இதை 'ரு' என உச்சரிப்பதா அல்லது 'ரி' என உச்சரிப்பதா என குழப்பம் வரலாம். அனைத்தையும் நான் விளக்கிச் சொல்கிறேன். கவலை வேண்டாம்.
முன் சொன்னது போல இது சமஸ்கிருத எழுத்து ஆகும். இதன் உச்சரிப்பு 'ரி'-க்கும் 'ரு'க்கும் இடைப்பட்ட உச்சரிப்பு ஆகும். இந்த எழுத்தின் உச்சரிப்பு மிக எளிமையானது தான், நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் சரளமாக உபயோகிக்கும் உச்சரிப்பு இது.
முதலில் இது உயிர் எழுத்து என்பது எப்படி என்பதை விளக்குகிறேன்.
மொழிக்கு ஆதாரம் ஒலி எனப்படும் ஓசையே ஆகும்.
அந்த ஓசைகளை இரண்டாகப் பிரிக்கலாம், உயிர் மற்றும் மெய்.
உயிர் ஒசை என்பது தொடர்ந்து காற்று வெளிப்படுவதால் உருவாவது. மெய்யோசை என்பது வெளிப்படும் காற்றை அண்ணம், நாக்கு பல் உதடு போன்ற பாகங்களால்  தடுத்து நிறுத்துவதால் உருவாவது. உயிர் ஓசையை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்க முடியும்.
உதாரணமாக அ.........................................................................
என்று சொல்லிப் பாருங்களேன்.
காற்றறையில் காற்று தீரும் வரை அ................................................... என்று நீட்டி சொல்லிக் கொண்டே இருக்க முடியும்.
ஆ...........................................................
ஈ..............................
ஊ..........................................
ஏ.............................................
ஓ................................................
இதேபோல் எல்லா உயிர் ஓசையையும் தொடர்ந்து உச்சரிப்பில் நிலை நிறுத்த முடியும்.
ஆனால் மெய் ஓசையை அவ்வாறு நிலை நிறுத்த முடியாது.
க்.............. என சொல்லிப் பாருங்கள். சொல்ல முடியாது.
க். என ஒரு நொடியில் ஓசை நின்று போகும்.  க்................. என ஒசையை நிலை நிறுத்த முயற்சித்தால் க்...கு....உ....    என "உ" எனும் உயிர் ஓசை தான் வெளிப்படும். ஏனென்றால் காற்று தொடர்ந்து வெளிப்படுவதால் தோன்றுவது உயிர் ஓசை. காற்றை தடுத்து நிறுத்துவதால் தோன்றுவது மெய் ஓசை.
காற்றை தொண்டையில் அண்ணத்தின் பின்புறம் தடுத்து நிறுத்துவதால் உருவாவது க் என்னும் மெய்.
நடு அண்ணம் தடுத்து நிறுத்துவதால் உருவாவது ச் என்னும் மெய்,
நுனி அண்ணம் தடுத்து நிறுத்துவதால் உருவாவது ட் என்னும் மெய்,
நாக்கு பல்லில் மோதி தடுத்து நிறுத்துவதால் உருவாவது த் என்னும் மெய், உதடுகள் தடுத்து நிறுத்துவதால் உருவாவது ப் என்னும் மெய்.

பொதுவாக எந்த ஒரு உயிரழுத்தையும் நாம் உச்சரிக்கும் போது நாக்கு வேறு எந்த பாகத்தையும் தொடாது. अ... आ...इ...ई...उ...ऊ...ए...ऐ...ओ...औ... உச்சரித்துப் பாருங்களேன்.

கீ..............(ஈ)
பு...........................(உ)
மே......................(ஏ)
இந்த எழுத்துக்களை உச்சரித்துப் பாருங்கள். இவற்றை ஓசை மாறாமல் நீண்ட நேரம் உச்சரிக்க முடியவில்லை அல்லவா, உயிர் எழுத்தின் உச்சரிப்பு வந்துவிடுகிறது அல்லவா. அதாவது நீட்டி உச்சரிக்கும்போது மெய் எழுத்தின் ஓசை மறைந்து உயிரெழுத்தின் ஓசைதான் நிலையாக நிற்கிறது. உயிரெழுத்துக்களை மட்டும் ஓசை மாறாமல் நீண்ட நேரம் உச்சரிக்க முடியும்.
உயிர் எழுத்து ஓசை மெய் எழுத்து ஓசை உயிர்மெய் எழுத்து ஓசை என்றால் என்னவென்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ய்...................................
ர்....................................
ல்.....................................
வ்....................................
இந்த எழுத்துக்களை
உயிர் எழுத்து, மெய் எழுத்து தவிர இரண்டிற்கும் இடைப்பட்ட எழுத்துக்கள் உள்ளன. இவற்றை தமிழில் இடையின மெய் என்பர்.  மற்ற மொழிகளில் Half Consonants அல்லது Half Vowels என்று அதாவது அரை உயிர் அரை மெய் என்று  அழைப்பர்.
ய, ர, ல, வ ஆகிய நான்கும் இந்த வகை ஆகும். தமிழில் "ல" ஓசை வேறுபாட்டால் "ல" "ள" "ழ" என்று மூன்று ல ஓசைகள் உள்ளன. ஆனால் அசலில் இடையின எழுத்துக்கள், அதாவது உயிருக்கும் மெய்க்கும் இடைப்பட்ட எழுத்துக்கள் ய ர ழ வ என்ற நான்கு எழுத்துகளே ஆகும்.
இந்த நான்கு எழுத்துக்களில் ய மற்றும் வ ஆகியவை இரு உயிர் ஓசைகளின் சேர்க்கையால் உண்டாவதாகும்.
இ+அ=ய
உ+அ=வ
தமிழில் புணர்ச்சி இலக்கணம் தெரிந்தவர்கள் உடம்படுமெய் பற்றி அறிந்திருப்பீர்கள்.
நிலைமொழியில் வருமொழியிலும் உயிர் எழுத்து இருக்கும் போது, உயிர் எழுத்தும் உயிர் எழுத்தும் சேரும் போது, புணர்ச்சியில் உடம்படுமெய்யாக "ய" மற்றும் "வ" தோன்றும். அதவது ய மற்றும் வ இரண்டு உயிர் எழுத்து சேர்ந்து உருவாகும் இடையின எழுத்து என்பது தெளிவு.
மீதமுள்ள ர மற்றும் ல ஆகியவை தனி உயிரோசை கொண்டவை.
சமஸ்கிருதத்தில் இவ்விரு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் வகையில் சேர்க்கப்பட்டு உள்ளன, ஏனெனில் இவை அரை உயிர் எழுத்துக்கள் எனினும் இவை உயிர் எழுத்துக்களைப் போலவே நிலை பெற்ற ஓசையைக் கொண்டவை. இந்த எழுத்துக்களின் ஓசை மற்றும் உச்சரிப்பைக் கற்றுக் கொண்ட பிறகு இது தெளிவாக விளங்கும்.

ऋ இப்போது இந்த எழுத்தின் உச்சரிப்புக்கு வருவோம். இந்த எழுத்தின் உச்சரிப்பு 'ரு' வும் அல்ல, 'ரி' யும் அல்ல. இந்த எழுத்து 'ரு'க்கும் 'ரி'க்கும் இடப்பட்ட உச்சரிப்பு கொண்டது என்பதே உண்மை. அதாவது 'ர்' என்னும் இடையின எழுத்தின்(அரை உயிர் எழுத்தின்) அடிப்படையில் பிறந்த 'இ' க்கும் 'உ'க்கும் இடைப்பட்ட ஓசை ஆகும்.
உ என்னும் எழுத்தை உச்சரிக்க உதடுகளைக் குவிக்க வேண்டும். இ என்னும் எழுத்தை உச்சரிக்க உதடுகளைக் குவிக்காமல் உச்சரிக்க வேண்டும்.
இந்த ऋ என்னும் எழுத்தை உச்சரிப்பது உதடுகளைக் குவிக்காமல் 'உ' என்று உச்சரிப்பதைப் போன்றது. அவ்வாறு உதடுகளைக் குவிக்காமல் எழுப்பும் 'உ' என்னும் உயிரோசை 'ர்' என்னும் இடையின எழுத்தின் ஆதாரமாகப் பிறப்பதே ऋ என்னும் இவ்வெழுத்தாகும்.
ऋ = 'ர்' + 'இ' க்கும் 'உ'க்கும் இடைப்பட்ட ஓசை
    = 'ர்' + (உதடுகளைக் குவிக்காமல் உருவாக்கும் 'உ' ஓசை)
ऋ இது ஓர் உயிர் எழுத்தாகும். முன்பு நாம் சொன்னதுபோல உயிர் எழுத்துக்கள் நிலைபெற்ற ஓசை கொண்டவை. இந்த ஓசையை ऋ............................ என்று ஒலித்துக் கொண்டே இருக்க முடியும்.

ऋ வின் இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நாம் அன்றாடம் பேச்சு வழக்கில் உ என்ற ஓசையை உதட்டைக் குவிக்காமல் இவ்வாறுதான் உச்சரிப்போம்.
'ரோடு' என்பதை உச்சரித்துப் பாருங்கள்.  'டு' என்பதில் 'ட்+உ' இருந்தாலும் பேச்சு வழக்கில் நாம் 'உ'வைப் போல உதட்டைக் குவித்து உச்சரிப்பதில்லை.
உதட்டைக் குவிக்காமல் ரோடு என்றுதான் உச்சரிப்போம். இறுதியில் உள்ள அந்த 'உதட்டைக் குவிக்காத உ என்னும் ஓசை' உள்ளதல்லவா? அதே ஓசை தான் நான் சொல்வது. அந்த ஓசை 'ர்' என்பதன் அடியாகப் பிறப்பது தான் ऋ என்னும் எழுத்து.
இதேபோல்
கண்ணு,
மூக்கு
மாடு
போன்ற 'உ' ஓசையைக் கொண்ட பேச்சு வழக்குச் சொற்களை உச்சரித்துப் பாருங்கள்.
இ வுக்கும் உ வுக்கும் இடைப்பட்ட அந்த ஓசை என்னவென்று விளங்கும்.
அதுதான் இந்த எழுத்தின் சரியான உச்சரிப்பு.  சிரமம் ஒன்றும் அல்ல.
இவ்வாறு உச்சரிக்க முயற்சி செய்து சிரமப்படாதீர்கள். தொடர்ந்து படியுங்கள். சமஸ்கிருதத்தில் தான் இவ்வாறு சிரமப் பட்டு சரியாக உச்சரிக்க வேண்டும். சமஸ்கிருத்ததில் இருந்து வந்த  போன்ற பல இந்திய மொழிகள் இந்த எழுத்தை உபயோகிக்கின்றன, கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் ஒவ்வொரு மொழியும் அதற்கேற்ப ऋ இந்த எழுத்தின் உச்சரிப்பை 'ர' 'ரி' 'ரு' என பலவிதமாக மாற்றிக் கொண்டன. அதாவது அந்த மொழி பேசுபவர்களால் மாற்றப்பட்டுவிட்டன. மராத்தியில் இந்த எழுத்து 'ரு' என உச்சரிக்கப் படுகிறது. மற்ற மொழிகளில் பொதுவாக 'ரி' என உச்சரிக்கப் படுகிறது. சில வட இந்திய மொழிகளில் 'ர' எனவும் உச்சரிக்கப் படுகிறது.

மேலே சொல்லப்பட்ட விளக்கம் சிலருக்கு புரிந்துகொள்ள சிரமமாகத் தோன்றலாம். எந்த ஒரு ஹிந்தி புத்தகத்திலும் இந்த எழுத்திற்கு இப்படி தெளிவான விளக்கமோ சரியான உச்சரிப்போ காணக் கிடைக்கவில்லை. சில புத்தகங்களில் 'ரி' என்றும் சிலவற்றில் 'ரு' என்றும் மட்டும்தான் உள்ளது. இந்த எழுத்தைப் பற்றி எந்தவொரு விளக்கமும் எங்கும் இல்லை. எனவே தெளிவான விளக்கம் அளிக்க வேண்டியே இவ்வளவு சொல்ல வேண்டியதாயிற்று.

நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். இந்த எழுத்து ஹிந்தியில், "ரி"க்கும் "ரு"க்கும் இடைப்பட்ட ஓசை-உதட்டைக் குவிக்காமல் ஒலிக்கும் உ ஓசை கொண்டது .

இந்த எழுத்தை வேறு ஒரு விதமாகவும் எழுதலாம்.
ऋ இந்த எழுத்தும் மற்ற உயிரெழுத்துக்களைப் போலவே மெய் எழுத்துக்களோடு சேரும். மெய் எழுத்துக்களோடு இந்த எழுத்து சேரும்போது அந்த மெய் எழுத்தோடு 'ரு' சேர்த்து உச்சரிக்க வேண்டும்.(உதட்டைக் குவிக்காமல் ஒலிக்கும் ரு)
क+ऋ = कृ (க்+ரி=க்ரு)
இந்த எழுத்தின் மாத்ரா ृ ஆகும். उ மற்றும் ऊ வின் மாத்ராவைப் போல இதுவும் எழுத்தின் கீழ்ப்பகுதியில் இடப்படுகிறது.
 उ மற்றும் ऊ வின் மாத்ராவான ु ू வையும், ऋ இன் மாத்ராவான ृ இதையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள். उ மற்றும் ऊ வின் மாத்ரா கடிகாரமுள் திசையில்(Cloclwise Direction) எழுதப்படும்.  ऋ இன் மாத்ராவான ृ கடிகாரமுள் எதிர் திசையில் (Anti Clockwise Direction) எழுதப்படும்.
ऋ இன் மாத்ரா ृ எவ்வாறு எழுத வேண்டும் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

இப்போது ऋ இந்த எழுத்தை உபயோகித்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
ऋषि - ருஷி - முனிவர்
ऋक् - ருக் - ரிக்வேதம்
ऋत - ருத்(சமஸ்கிருதம்) - நேர்மை
ऋतु - ருது(சமஸ்கிருதம்)  - பருவகாலம்
पृथ्वी - ப்ருத்வீ - பூமி
गृह - க்ருஹ் - வீடு
कृपया - க்ருபயா - தயவு செய்து

முதல் நான்கு வார்த்தைகளின் ஆரம்பத்திலும் மற்ற வார்த்தைகளில் மாத்ரா வடிவிலும் ऋ என்னும் உயிரெழுத்தைக் காண்கிறீர்கள் அல்லவா..
முன்பு படித்த எழுத்துக்களுடன் இதையும் சேர்த்து எழுதிக்கொண்டே உச்சரித்து பயிற்சி செய்யுங்கள்.
அடுத்த பாடத்தில் காணலாம்.
எதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருந்தால் Comment செய்ய்ங்கள் அல்லது ashok58627@gmail.com க்கு Email செய்யுங்கள்.
நன்றி! शुक्रिया

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக